தேர்தலுக்கு முன்பு ஒரு கட்சி கூட சேரவில்லை.. ஒரே மாசத்தில், விஜய்க்கு எத்தனை கட்சி ஆதரவு பாருங்க!
சென்னை: தமிழக அரசியலில் "தேர்தலுக்கு முன்" மற்றும் "தேர்தலுக்கு பின்" என இரண்டு அத்தியாயங்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதி முடித்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய். தேர்தல் களத்தில் "ஆட்சியில் பங்கு" என்று விஜய் விடுத்த வெளிப்படையான அழைப்பை ஒரு கட்சி கூட கண்டுகொள்ளவில்லை.
ஆனால், ஆட்சி அமைந்ததுமே பல கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. விஜய்யால் அதிமுகவில் ஒரு மிகப்பெரிய பிளவே ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

குவியும் ஆதரவு
தவெக கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் விஜய். கட்சி தொடங்கி முதல் மாநாட்டிலேயே, ஆட்சியில் பங்கு தருவோம் என்ற குரலை வெளிப்படுத்தினார் விஜய். ஆரம்பத்தில் விஜய்யின் அழைப்பைத் தவிர்த்த கட்சிகள், இப்போது அவர் பக்கம் அடுத்தடுத்து சாயத் தொடங்கியுள்ளன.
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுமே, முதல் கட்சியாக காங்கிரஸ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது. 5 எம்.எல்.ஏக்களோடு, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது காங்கிரஸ் கட்சி. அமமுகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவான காமராஜ், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிலைக்க ஆதரவு
தற்போதைய அரசு கவிழாமல் இருக்கவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் சில முக்கிய சக்திகளின் ஆதரவு விஜய்க்குத் தேவையாக இருந்தது. விசிக மற்றும் இடதுசாரிகள் தவெக ஆட்சி அமைய நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தன. விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு கைகொடுத்துள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்துள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு
குறிப்பாக, அதிமுகவின் முக்கிய தூண்களாக கருதப்பட்ட எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலையே உலுக்கியுள்ளது. இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
களத்தில் இனி இரண்டே பேர்: தவெக vs திமுக
தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்க்கும்போது, தமிழகத்தில் பலமுனைப் போட்டி என்பது மறைந்து 'நேருக்கு நேர்' என்ற இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது. ஒருபுறம் ஆளுங்கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடும் திமுக, மறுபுறம், புதிய மாற்றத்தை முன்னிறுத்தி வேகம் எடுக்கும் தவெக.
அதிமுகவின் வெற்றிடம்.. இனி விஜய்தான்
தமிழக அரசியலில் 'அதிமுக' என்ற ஒரு வலுவான எதிர்க்கட்சி அல்லது ஆட்சிக்கு மாற்றான சக்தி தேவைப்படாத ஒரு நிலையை தற்போதைய சூழல் ஏற்படுத்தியிருப்பது போலத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகாலம் தமிழக அரசியல் களத்தில் அதிமுக ஆக்கிரமித்திருந்த அந்த பிரம்மாண்டமான "மாற்று அரசியல்" சிம்மாசனத்தை, இப்போது விஜய் தனது தவெக மூலம் முழுமையாக நிரப்பத் தொடங்கிவிட்டார். இனி தமிழ்நாட்டின் போட்டி என்பது "தவெக - திமுக" என்ற இரண்டு முனைகளைச் சுற்றியே சுழலப் போகிறது.












Click it and Unblock the Notifications