பிரதமரின் சூரியசக்தி மின் திட்டம்.. மத்திய அரசின் மானியம்.. இதோ தமிழ்நாட்டில் "ரூப் டாப்" சர்ப்ரைஸ்
சென்னை: பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டமானது, பொதுமக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தமிழகத்திலும் பரவலான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், "பிரதமரின் சூரிய வீடு" திட்டம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன?
நம்முடைய வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில், நேரடியாக களம் இறங்கியிருக்கிறது.. இதற்காகவே, "பிரதமரின் சூரிய வீடு" என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி கடந்த வருடம் பிப்ரவரியில் அறிவித்திருந்தார்.

மானிய விவரங்கள் என்னென்ன?
அதன்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.
மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 தான்.
சிக்கல்கள் - மின்சார வாரியம்
அரசு மானியம் தருவதால் பல்வேறு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.. தமிழகத்திலும், வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
எனினும், நிறைய பேருக்கு எந்த நிறுவனம் மூலமாக, சூரியசக்தி கூரைகள் அமைப்பது என்பது தெரியவில்லை. அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் கிடைப்பதுமில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு, சமீபத்தில்கூட தமிழக மின்வாரியம் அழைப்பு விடுத்திருந்தது.. மின்வாரியத்தின் இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
இத்திட்டத்தில் இணைய வேண்டுமானால், மத்திய மின் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தவகையில், இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்..
விண்ணப்பிக்கலாம் - நன்மைகள்
இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தில் மின் நிலையம் அமைக்க, தமிழகத்தில் இருந்து, 30,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில், இதுவரை, 23,000 வீடுகளில், 1 கிலோ வாட், 2 கி.வாட் என, பல்வேறு திறன்களில் ஒட்டுமொத்தமாக, 120 மெகா வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் திட்டத்தை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துகள் இதன்மூலம் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் அதிக வருவாயை ஈட்டி தரும் என்பதுடன் மின்சார செலவை குறைக்கும்.. அத்துடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications