பெங்களூர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் 2 பேர் தங்கிய சென்னை மேன்சன்.. என்.ஐ.ஏ. அதிரடி சோதனை ஏன்?
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சென்னையில் மண்ணடி உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

லோக்சபா தேர்தல் நேரத்தில் நாட்டையே அதிர வைத்த இந்த வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக 8 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் கஃபே-யில் வெடிகுண்டு பையை வைத்துவிட்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதியின் படங்களும் வெளியிடப்பட்டன. இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) (NIA)-க்கும் மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையில் ராமேஸ்வரம் கஃபேயில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தீவிரவாதி அணிந்திருந்த தொப்பி கழிவறை ஒன்றில் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொப்பியை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அது சென்னையில் வாங்கப்பட்டது தெரிய வந்தது. இந்த விசாரணைகளில் ஒரு கட்டத்தில் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு சம்பவத்தில் 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு மேன்சனில் 2 மாதங்கள் தங்கி இருந்ததும் சென்னையில் இருந்து பெங்களூர் வந்து வெடிகுண்டு வைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்தனர். இதன் அடுத்த கட்டமாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 5 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று அதிகாலை முதல் சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.
சென்னை மண்ணடி பகுதிக்கும் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கியிருந்த தீவிரவாதிகள் இருவரும் வந்து சென்ற சிசிடிவி வீடியோ
ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி அதனடிப்படையில் இந்த சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications