மா.செ. கூட்டத்துக்கு எடப்பாடியும் வரலாம்.. நாங்கள் தண்ணீர் பாட்டிலெல்லாம் வீச மாட்டோம்.. புகழேந்தி
சென்னை: ஓபிஎஸ் நடத்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமியும் வரலாம். நாங்கள் அவங்களை மாதிரி தண்ணீர் பாட்டிலை எல்லாம் வீசமாட்டோம் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக யாருக்கு என்ற பஞ்சாயத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்துள்ளார்கள். இருவரும் தாங்கள்தான் ஒருங்கிணைப்பாளர், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அதிகாரத்தின்படி கட்சியில் நீக்கங்களையும் நியமனங்களையும் செய்து வருகிறார்கள்.
ஓபிஎஸ்ஸோ கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும், அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பொதுக் குழு உறுப்பினர்களுக்கே எல்லா அதிகாரமும் இருக்கிறது என்கிறார்.

எம்ஜிஆர்
இந்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்த மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் ஓபிஎஸ் தரப்பு இன்றைய தினம் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், பண்ருட்டி ராமசந்திரன், ஜேசிடி பிரபாகரன், பெங்களூர் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூர் புகழேந்தி
இந்த கூட்டத்திற்கு முன்னதாக பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இதுதான் உண்மையான அதிமுக. இங்கு 88 க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் வந்துள்ளனர். பண்ருட்டியார் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தடையே கிடையாது. நாற்காலிகள் எல்லாம் போடப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி
இவ்வளவு ஏன் எடப்பாடி பழனிசாமி கூட வரலாம். நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அவர்களை போல் தண்ணீர் பாட்டிலை வீசி அடிக்க மாட்டோம். வந்து ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு இந்த நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளலாம் என புகழேந்தி கிண்டலாக தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது.

ஓபிஎஸ்
இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் வந்திருந்தார். அவரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வானகரம் மண்டபத்தின் உள்ளே விடாமல் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் ஒரு அறையில் அமர்ந்திருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி விழா அரங்கிற்கு வந்தவுடன் ஓபிஎஸ்ஸும் வந்திருந்தார். அப்போது அவரை பொதுக் குழு நிர்வாகிகள் கோஷமிட்டு மேடையை விட்டு இறங்கி செல்லுமாறு விரட்டினர்.

பொதுக் குழு
இந்த நிலையில் அன்றைய தினம் நிகழ்ந்த பொதுக் குழுவில் ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளருமாக இருந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொதுக் குழு நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஒரு பொதுக் குழு ஜூலை 11 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக் குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மேடையில் இருந்து இறங்க முற்படடனர்.

எடப்பாடி ஆதரவாளர்கள்
அப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினார். மேலும் ஓபிஎஸ் வந்த பிரசார வாகனத்தை பஞ்சர் செய்திருந்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களைத்தான் பெங்களூர் புகழேந்தி இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications