பாரத் பந்த்.. சென்னையில் பாதிப்பு இல்லை! அரசு பேருந்துகள் 100% இயக்கம்!
சென்னை: நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்திலும் பந்த் நடக்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. ஆனால், சென்னையில் இன்று அரசு பேருந்துகள் 100% இயங்கும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது. ஆனால் தமிழக கேரள எல்லையிலும், புதுச்சேரியிலும் பந்த் தாக்கம் இருக்கிறது.
இந்தியா இன்று 22வது பொது வேலை நிறுத்தத்தை சந்திக்கிறது. பந்த்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட உள்ளனர் என தொழிற்சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்தனர். ஆனால், அரசு ஊழியர்கள் பந்த்தில் பங்கேற்றால் சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.
அதாவது, "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை, சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையின் 32 பணிமனைகளிலிருந்து வழக்கம்போல் 650க்கு மேற்பட்ட வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது" என போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.
ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கொடுக்கப்படமாட்டாது என்றும், ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் போராட்டங்களில் பங்கேற்றால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரித்திருந்தார். இது குறித்து நேற்று அவர் விடுத்திருந்த சுற்றறிக்கையில்,
"இன்று (9ம் தேதி) நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க், நோ பே என்ற அடிப்படையில் இன்று ஒரு நாள் சம்பளம் வழங்கப்படாது. பொது வேலைநிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறுபுறம் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும், கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் முழு அளவில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பேருந்து, ஆட்டோ சேவைகள் பாதிக்கப்டபட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications