irctc Tatkal update| தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம்.. ரயில்வே அமைச்சர் சூப்பர் அறிவிப்பு
சென்னை: தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என்றும் இ-ஆதார் வெரிஃபிகேஷன் மூலம் உண்மையான பயனாளர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய பலர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அதன்படி, தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர், ஏற்கனவே மாஸ்டர் லிஸ்டை (பயணிகள் லிஸ்டை) ஐஆர்சிடிசி தளத்தில் பதிவு செய்வது,ஐஆர்சிடிசி வாலட்டில் பணம் வைப்பது, சரியான வேகம் கொண்ட இணையசேவையை பயன்படுத்துவது, என பல்வேறு விஷயங்களை சரியாகவே செய்கிறார்கள்.

அதேபோல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் 10.57க்கு மேல் லாக் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் ஐஆர்சிடிசி தளம் சரியாக 11.00 முதல் 11.04 வரை சுத்தமாக ஓபனே ஆவது கிடையாது. யாருக்குமே ஓபன் ஆகாமல் சில நொடிகளில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் வந்துவிடும். பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் எல்லாம் புக்கிங் செய்வது என்பது கடவுளை நேரில் தரிசனம் செய்வதற்கு சமம். அவ்வளவு எளிதாக கிடைக்காது. ஏன் எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைப்பது இல்லை. தட்கல் டிக்கெட் புக்கிங் ஏழைகளுக்கு மட்டுமல்ல. யாருக்குமே எட்டாத உயரத்தில் இருக்கிறது.
பலரால் இன்று வரை ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ள நிலையில், புரோக்கர்களால் எளிதாக முன்பதிவு செய்ய முடிவதாக கூறப்படுகிறது. சில ரயில் நிலைய ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளை புரோக்கர்கள் மொத்தமாக எடுத்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது . இதுபற்றி கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் விவாதங்கள் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. முக்கிய வழித்தடங்களில்,மக்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வழித்தடங்களில் அரசு மக்களுக்கு எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வந்தது. பல்வேறு புகார்கள் ரயில்வே அமைச்சகத்திற்கு பறந்தது.
இந்நிலையில் இந்திய ரயில்வே விரைவில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்க உள்ளது. இது உண்மையான பயனர்களுக்கு தேவைப்படும்போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற உதவும் என்று கூறினார். முன்னதாக தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி முடக்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்பால், ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய இன்னும் கூடுதல் நேரம் ஆகும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன் ஒருவர் கூறுகையில்,தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பேமெண்ட் ஸ்டேஜூக்கு செல்ல கூடுதலாக 2 நிமிட நேரம் ஆகும். ஆதார் அங்கீகாரத்திற்கு இன்னும் நேரம் எடுக்கும். இந்த 2 நிமிட நேரமே, ரயில் முன்பதிவு மையங்களிலிருந்து தட்கல் பெற போதுமானதாக இருக்கும்.. ரயில் நிலையம் மற்றும் ஆன்லைன் புக்கிங் என இரண்டு முறைகளிலும் ஒரு வரம்பை உருவாக்குங்கள்.இருக்கும் சிக்கலை பெரிதாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications