ஓபிஎஸ்ஸின் ‘மெகா’ திட்டத்தில் ‘திடீர்’ மாற்றம்? ‘வீம்பு’.. சசிகலா பாஸ் செய்த மெசேஜ்.. பின்னணி என்ன?
சென்னை : கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தும் ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் தனது செல்வாக்கைக் காட்டுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ள ஓபிஎஸ், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறார். முன்னதாக, வரும் செப்டம்பர் 15ல், கோவையில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டார் ஓபிஎஸ்.
ஈபிஎஸ்ஸின் வலதுகரம் எஸ்.பி.வேலுமணியின் கோட்டையான கோவையில், தனது பலத்தைக் காட்டலாம் என நினைத்தார் ஓபிஎஸ். அதற்கான பணிகளையும் கோவை செல்வராஜ் தொடங்கினார்.
இந்நிலையில் ஒருசில காரணங்களால் இந்த பொதுக்கூட்ட பிளான் காஞ்சிபுரத்திற்கு மாற இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

சசிகலா - ஓபிஎஸ்
கடந்த முறை வந்த தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒன்றாக இணைந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி இதனை ஏற்க மறுத்த நிலையில், இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்திருந்தார். சசிகலாவும் ஓபிஎஸ் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே பேசியிருந்தார். மேலும், சசிகலாவுக்கு நெருக்கமான பெண் நிர்வாகி ஒருவர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

கோவையில் மெகா பிளான்
ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்தார். தென் மாவட்டங்களில் மட்டும் தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இருக்கும் என்ற கணிப்பை உடைக்கும் வகையில், ஈபிஎஸ்ஸின் வலதுகரமான வேலுமணியின் கோட்டையான கோயம்புத்தூரில் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த முடிவெடுத்தார்.

கோவை செல்வராஜ்
இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் முன்னின்று மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே, சசிகலாவையும் இந்த பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்க வைக்கும் வகையில் அவரது தரப்பினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது ஓபிஎஸ் தரப்பு. சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பை பெரிய அளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றால் இதுபோன்ற பொதுக்கூட்ட மேடை தான் சரியாக இருக்கும் என கணக்குப் போட்டது ஓபிஎஸ் தரப்பு.

சசிகலா பாஸ் செய்த மெசேஜ்
இதை சசிகலாவுக்கு தூதாகச் செயல்பட்ட முக்கிய பெண் புள்ளியிடமும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி ஓபிஎஸ் தரப்பின் சிலர் சசிகலாவையும் வலியுறுத்தினர். இதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்த சசிகலா, ஓபிஎஸ் தரப்புக்கு இன்னொரு மெசேஜை பாஸ் செய்திருக்கிறாராம்.

இடத்தை மாற்றச்சொன்ன சசிகலா
செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று கோவையில் ஓபிஎஸ் நடத்தத் திட்டமிட்ட பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரத்திற்கு மாற்றச் சொல்லியிருக்கிறாராம் சசிகலா. அதனை ஓ.பன்னீர்செல்வமும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கோவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான முயற்சிகள் கடந்த ஓரிரு நாட்களாக சுணங்கியுள்ளதாம்.

பின்னணி என்ன?
நாம் ஈபிஎஸ்ஸுக்கு பலமுள்ள கோவையில் வீம்பாகப் பொதுக்கூட்டம் நடத்தி, ஒருவேளை எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை என்றால் சிக்கல் ஆகிவிடும். அது நமக்கு பெரிய பின்னடைவாக கருதப்படும், இரண்டு தலைவர்கள் இணையும் மேடை என்றால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அதில் கோட்டைவிட்டு விடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறாராம் சசிகலா.

காஞ்சிபுரத்தில்
இதற்காகவே, காஞ்சிபுரத்தில் கூட்டத்தை நடத்தலாம். அங்கு நமக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. நானும் நிர்வாகிகளிடம் பேசுகிறேன். அண்ணா பிறந்த காஞ்சியிலேயே அவரது பிறந்தநாளன்று பொதுக்கூட்டம் நடத்தினால் தொண்டர்கள் மத்தியில் கவனம் பெறும் எனக் கூறியிருக்கிறாராம் சசிகலா. இதனால், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

சசிகலா வந்தால் தான்
சசிகலா நிச்சயம் அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தால் இடத்தை மாற்றலாம் என ஓபிஎஸ் தரப்பின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருக்கின்றனராம். நேற்று வந்த தீர்ப்பு சசிகலா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர் பங்கேற்பதில் சிக்கல் எழலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், கோவையில் பொதுக்கூட்டம் நடக்குமா அல்லது இடம் மாற்றப்படுமா என்பதற்கான பதில் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications