உருண்ட 2 தலைகள்.. ஆளுநர் முன் உள்ள ஃபைல்.. ஸ்டாலின் சொன்ன விஷயத்தால் ‘கிலி’யில் அதிமுக மாஜிக்கள்!
சென்னை: இன்று தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு அனுமதி கோரி மீண்டும் வலியுறுத்தினார். இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 'கிலி’யில் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு வந்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே சிக்கலான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராஜ்பவன் சென்ற முதல்வர் ஸ்டாலின்: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரியது. இந்த வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்தது.
மேலும், மசோதா நிலுவை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை ஆலோசனைக்கு அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக அமைச்சர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
45 நிமிடங்கள் மீட்டிங்: முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ரகுபதி ஆகியோர் சென்றனர். வெளியே வந்து முதல்வரை வரவேற்றார் ஆளுநர் ரவி. பின்னர் இருவரும் மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது 2 தலைகளின் பெயர்கள் உருண்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேசி வீரமணி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி கோரி ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பட்டு நிலுவையில் இருக்கும் கோப்புகளுக்கு அனுமதி அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேசி வீரமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகள் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு ஒப்புதல் வழங்க முதல்வர் ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.
இதில் கேசி வீரமணி தொடர்பான கோப்பு 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பு 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் முன் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஃபைல்களுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரியுள்ளார் ஸ்டாலின்.
மாஜிக்கள் அச்சம்: முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது ஊழல் வழக்குகளில் விசாரணை தொடங்க அனுமதி கோரி தமிழக அரசு அனுப்பிய ஃபைல்களை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. தமிழக முதல்வரின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு அண்மையில் தான் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான விசாரணை தொடங்க ஆளுநர் ரவி அனுமதி அளித்தார். அதேசமயம், கேசி வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் நேரடியாக வலியுறுத்தி இருப்பதால், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேசி வீரமணி ஆகியோர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக உடனான கூட்டணியை அதிமுக துண்டித்துக் கொண்டுள்ளதால், ஆளுநர் தங்கள் மீதான விசாரணைக்கு ஓகே சொல்லக்கூடும் என அவர்கள் அச்சத்தில் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications