சென்னையில் நகைக்கடைக்காரருக்கு எமனாகிய பைக் ரேஸ்.. போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: சென்னையில் மேம்பாலங்கள் ரேஸ் செல்வது அதிக அளவில் நடக்கிறது. தடையை மீறி இளைஞர்கள் ரேஸ் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் விபத்தை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சென்னையில் மூடப்பட்ட மேம்பாலத்தில் ரேஸ் நடத்தியதால் நகைக்கடைக்காரர் உயிரிழந்தார். இதனால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து மேம்பாலங்கள் நடுவே பிளாஸ்டிக் தடுப்புகளை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள போக்குவரத்து போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
2கே கிட்ஸ், 2 ஜென் கிட்ஸ்களுக்கு பைக் ரேஸ் மோகம் அதிக அளவில் இருக்கிறது. இவர்களின் மோகத்தை புரிந்து கொண்ட பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தன. இதை பல இளைஞர்கள், ஆர்வமுடன் வாங்க தொடங்கினார்கள். சாதாரணமாகவே அந்த பைக்குகள் 150 கிமீ முதல் 200 கிமீ வேகத்தில் செல்கின்றன. அவற்றை வைத்துரேஸ் போட்டி நடத்துகிறார்கள். இதனால் சென்னையில் 'பைக் ரேஸ்' பந்தய கலாசாரம் அதிகரித்துள்ளது. சென்னையில் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் ரேஸ் நடக்கிறது.

அதிவேகம் ஆபத்து என்கிற நிலையில், ரேஸால் இளைஞர்கள் மட்டுமல்ல.. அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், உடல் உறுப்புகளை இழக்கும் சம்பவங்களும் அதிகமாகிவிட்டது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் ராயபுரம், நேப்பியர் பாலம், கிண்டி, மதுரவாயல் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில் 'பைக் ரேஸ்' நடத்துவதை கண்டறிந்த போலீசார், அங்கு இரவு நேரங்களில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகிறார்கள்,
இந்த நடவடிக்கை மூலம் 'பைக் ரேஸ்' குறைந்துள்ளது. அதேபோல் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 29 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள். பைக் ரேசில் ஈடுபடும் நபர்களின் வாகன ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற விபத்தில் நகைக்கடைக்காரர் உள்பட 2 பேர் பலியானதற்கு பைக் ரேஸ்தான் காரணம் என்று புகார் எழுந்தது.எனினும் இதனை போலீசார் மறுத்து வருகிறார்கள். அதிவேகமாக பைக்கில் வந்தவர் முந்தி செல்ல முயன்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
விபத்து நடைபெற்ற மேம்பாலத்தில் சாலை நடுவே தடுப்புகள் இல்லாததே இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது. எனவே சென்னையில் தடுப்புகள் இல்லாத மேம்பாலங்களில் நடுவே மாநகராட்சி உதவியுடன் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications