பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்.. இனி அலைய வேண்டாம்.. ஆன்லைனில் டவுன்லோட் பண்ணுங்க
சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 30 மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல நாட்கள் சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது.

அரசு அதிகாரிகள், மீட்புப் படையினரின் தொடர் முயற்சியால், பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில் அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜன.1, 2018 முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் https://crstn.org என்ற இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2018க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவைப்படின் https://crstn.org என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களே இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications