எங்கே செல்லும் இந்த “பாதை”? நேற்று டெல்லி.. இன்று மன்னார்குடி - பரிதவிப்பில் பன்னீர் தரப்பு
சென்னை: அதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நம்பி வந்த டெல்லியும், மன்னார்குடியும் பிடி கொடுக்காமல் இழுத்தடித்து வருவது ஒருவிதமான குழப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 20 நாட்களை கடந்துள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ் நகர்வுகள்
இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊரான தேனிக்கு சென்று ஆதரவாளார்களை சந்தித்து வருகிறார்.

நம்பிக்கை
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் டெல்லி மற்றும் மன்னார்குடி. ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியை மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

டெல்லி
ஆனால், தமிழ்நாடு பாஜகவோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும், மோடியை சந்திப்பதிலும் எடப்பாடி பழனிசாமிக்கே பாஜக தரப்பு முன்னுரிமை கொடுத்ததாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்ததும், எடப்பாடிக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்ததும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சற்று சலனப்படுத்தி இருக்கிறது.

பாஜக
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடக்கும் வருமான வரி சோதனைகள், டெல்லியில் பிரதமர் மோடி நேரம் கொடுக்காதது போன்றவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்று நம்பிக்கையை கொடுத்தன. ஆனாலும் டெல்லி தரப்பு ஒரு பிடி கொடுக்காமலேயே உள்ளதே. இதே நிலையில்தான் சசிகலா, டிடிவி தரப்பும் இருந்து வருகிறது.

மன்னார்குடி
2 நாட்கள் முன் தேனி சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று கூறி இருக்கிறார். அதேநாளில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "அதிமுகவில் சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று என்ற அடிப்படையிலேயே நகர்வுகள் இருக்கும்" என்று கூறினார். தாங்கள் இபிஎஸ் பக்கம் உள்ளீர்களா அல்லது ஓபிஎஸ் பக்கம் இருக்கிறீர்களா என்று தான் யார் பக்கமும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.
இரு தரப்பும் இப்படி பிடி கொடுக்காமல் இருப்பதால் அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதில் ஓ.பன்னீர்செல்வம் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications