திருத்தணியில் புலம் பெயர் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்.. திமுக அரசுதான் காரணம்! கொந்தளித்த அண்ணாமலை
சென்னை: திருத்தணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை 4 சிறுவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, "ஒரு காலத்தில் சீரான மாநிலமாக இருந்த தமிழகத்தை காட்டாட்சியாக மாற்றியதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கஞ்சா போதையில் இந்த கொடூரத்தை இக்கும்பல் அரங்கேற்றியுள்ளது எனவும், போதைப்பொருள் எளிதாக கிடைப்பதும், வன்முறையை கொண்டாடுவதும் தற்போது இந்த ஆட்சியில் இயல்பான ஒன்றாகிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

திருத்தணியில் கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மகாராஷ்டிராவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த சிறுவர்கள் 4 பேர், அந்த இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
அந்த புலம்பெயர் இளைஞர் பெயர் சுராஜ். அவர் மின்சார ரயிலில் வந்துகொண்டிருந்தார். அப்போது 4 சிறுவர்கள் அவரை வலுக்கட்டாயமாக தனி இடத்துக்கு அழைத்து சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் சுராஜை தாக்குவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதில் சுராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் அவரை சரமாரியாக தாக்குகின்றனர்.
அப்போது அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. வலி தாங்க முடியாம அந்த இளைஞர் கதறி அழுத போதும் விடாமல் அந்த கும்பலினர் தாக்குதல் நடத்தினர். ஒருவர் டேய்.. போதும்டா விடுடா.. அவன் தலையில் இருந்து ரத்தம் கொட்டுதுடா.. என கூறுவதும் போன்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 சிறுவர்களை கைது செய்தனர்.
அண்ணாமலை ட்வீட்
கஞ்சா போதையில் சிறுவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்துக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- திருத்தணியில் பணியாற்றி வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி சுராஜ் என்ற இளைஞர் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கஞ்சா போதையில் இருந்த கும்பல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது.
தமிழக அரசு தான் காரணம்
கழுத்தில் கத்தியை வைத்து ரீல்ஸ் எடுக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் தான் அவர் செய்த ஒரே 'குற்றம்'. திமுக ஆளும் தமிழ்நாட்டில் உள்ள கவலை தரும் யதார்த்தம். இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் கைது செய்தாலும், ஆழமாகப் பரவியுள்ள பெரிய சீர்கேடு அப்படியே உள்ளது.
போதைப்பொருள் எளிதாக கிடைப்பதும், வன்முறையை கொண்டாடுவதும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம், கொடூரமான ஆயுதங்களை எளிதாக கொண்டு செல்வது ஆகியவை தற்போது இந்த ஆட்சியில் இயல்பான ஒன்றாகிவிட்டது... ஒரு காலத்தில் சீரான மாநிலமாக இருந்த தமிழகத்தை காட்டாட்சியாக மாற்றியதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் ட்வீட்
இதேபோன்று கார்த்தி சிதம்பரமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன். தமிழக காவல்துறை தனது திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..
மாநிலம் தழுவிய அளவில் உடனடியாக முழு வீச்சில் செயல்பட்டு, தீவிர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் வாரத்திற்கு மூன்று முறை ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications