சின்ன சறுக்கல்.. அண்ணாமலையோட பிளானே ‘வேற’யாம்... ஸ்டாலின் தள்ளிப் போட்டதால ஜஸ்ட் மிஸ்ஸாகிருச்சு!
சென்னை: திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பா.ஜ.கவுக்கு கொண்டு வருவதில் அண்ணாமலை போட்ட பிளான் கொஞ்சம் மிஸ்ஸாகிவிட்டதாக பா.ஜ.க தரப்பில் பேசிக் கொள்கின்றனர்.
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.கவில் இணைந்தார்.
தி.மு.கவின் கொள்கைப் பரப்பு செயலாளரான திருச்சி சிவா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். தி.மு.கவின் முக்கிய நபராக உள்ள திருச்சி சிவாவின் மகன் பா.ஜ.கவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி சிவா மகன்
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். தி.மு.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.கவில் இணைந்ததால் தி.மு.கவில் சலசலப்பு எழுந்தது.
ஆனாலும், பா.ஜ.கவுக்கு இது பெரிய மைலேஜை ஏற்றித் தரவில்லை. இந்த மேட்டரில் அண்ணாமலை போட்ட திட்டம் தோல்வியடைந்ததே இதற்குக் காரணம் என கமலாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தி.மு.க மீது அதிருப்தி
சூர்யா சிவா, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, தி.மு.க தலைமை சீட் கொடுக்கவில்லை.
திருச்சியில் ஏற்கெனவே, கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இருவர் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். கே.என்.நேருவின் மகன் அருண் நேருவும் அரசியல் கூட்டங்களில் வரத் தொடங்கியுள்ளார். ஆனால், தனக்கு நல்ல பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால், சூர்யா அதிருப்தியில் இருந்து வந்தார்.

அமைச்சராக உதயநிதி
இந்நிலையில்தான் தற்போது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கவும், டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி ராஜாவை அமைச்சரவைக்குள் கொண்டு வரவும் தி.மு.கவில் பேச்சு எழுந்து வந்தது. சூர்யாவுக்கு தனது தந்தை திருச்சி சிவாவின் ஆதரவும் கிடைக்கவில்லை என்பதால் தலைமையாலும் கண்டுகொள்ளப்படவில்லை.
இதைத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். உதயநிதி உள்ளிட்டோர் அமைச்சர்களானதும், அக்கட்சியில் இருந்து ஒருவரை பா.ஜ.கவில் சேர வைத்து அரசியலை பரபரப்பாக்கலாம் என நினைத்தார்.

அண்ணாமலையின் திட்டம்
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு தரப்பட்டது கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதனால்தான் சூர்யா சிவா வெளியேறியதாகவும், அதேபோல, அதிருப்தியில் உள்ள பலரும் விரைவில் வெளியே வரக்கூடும் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க அண்ணாமலை திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஆளும்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரின் மகன் பா.ஜ.கவில் போய் சேர்ந்தால் அது அரசின் மீதும் மேலும் விமர்சனங்கள் குவியுவதற்கு வாய்ப்பாக அமையும். இந்த திட்டத்தை சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷாவிடமும் சொல்லி அண்ணாமலை பாராட்டைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஜஸ்ட் மிஸ்
ஆனால், இந்தத் தகவல் கசிந்தோ அல்லது வேறு காரணங்களாலோ தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் அறிவிப்பை தள்ளிப்போட்டுள்ளார். ஆனாலும், டெல்லி தலைமையிடமும் சூர்யா சிவாவின் பா.ஜ.க இணைவு பற்றி தெரிவித்துவிட்டதால் இப்போதே சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு அண்ணாமலை தள்ளப்பட்டார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications