அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இதனால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாடு தேர்தலில் ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய தலைவரான நிதின் நபின் தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள நிதின் நபின், திமுகவின் ஊழல் அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை
மேலும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து அண்ணாமலைக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை என்றும் அவர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அண்ணாமலை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். நேற்று பிரச்சாரத்தில் பங்கேற்றார். அவருக்கு அதிருப்தி இல்லை. பாஜக ஒரு அணியாகவே தேர்தலை எதிர்கொள்கிறது. யாருக்கும் அதிருப்தி இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
போட்டி இல்லை
அண்ணாமலை இந்த முறை கோவையில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்தது. அதிலும் வானதி சீனிவாசன் களமிறங்கிய நிலையில், அண்ணாமலைக்கு சீட் தரப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் கோபமடைந்த சூழலில், அண்ணாமலையே இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
தனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவைத் தானே எடுத்ததாகவும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மேலும், தனது முடிவை மதித்த கட்சித் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் என்டிஏ கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்வேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகவும் இது வாக்காளர்களை பிளாக் மெயில் செய்யும் செயல் என்றும் திமுக விமர்சித்து வரும் சூழலில், அது தொடர்பாகவும் நிதின் நபின் விளக்கமளித்துள்ளார். திமுகவின் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில் இல்லை என்ற அவர், மத்திய அரசு எந்தவொரு பாகுபாடுகளையும் காட்டுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், "இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. ஆனாலும், நாங்கள் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி திட்டங்களைக் கொடுத்து வருகிறோம். திமுகவினர் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வடகிழக்கில் நாங்கள் வளர்ச்சியைக் கொண்டு வந்து அரசுகளை அமைத்தோம். கேரளாவிற்கு மெட்ரோ திட்டங்கள் கிடைத்தன. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பொறுத்து வளர்ச்சி திட்டங்களை பாஜக எப்போதுமே ஒதுக்கியதில்லை. நாட்டின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம்
பாகுபாடு இல்லை
வாக்குகள் வரும் இடத்தில் மட்டுமே வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது காங்கிரஸின் சிந்தனை. வாக்குகள் பெற்றாலும் பெறாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனிடமும் வளர்ச்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. வாக்களித்தால் தான் வளர்ச்சி திட்டங்கள் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை" என்றார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.. வாக்குகள் மே 4ம் தேதி அன்று எண்ணப்படும். இந்தத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி இடையே தான் நேரடி போ்ட்டி இருக்கிறது. இது தவிர விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications