விஜய் அந்த கூட்டத்துல சேர்ந்துட்டாரு.. நீட் பற்றி தெரிஞ்சிக்கிட்டு பேசணும்.. பாய்ந்து வந்த பாஜக!
சென்னை: மாணவர்கள் வரவேற்கும் நீட் தேர்வை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கும் கட்சிகளின் கூட்டத்தில் விஜய் சேர்ந்திருக்கிறார் என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார் விஜய். சென்னை திருவான்மியூரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜய், மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்றும் விமர்சித்தார். பன்முகத்தன்மை தான் பலம் என்று குறிப்பிட்ட விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாகவும் விஜய் கூறினார். நீட் விலக்கு மட்டுமே இதற்கு தீர்வு என்று கூறிய விஜய், நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இப்பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில், விஜய்க்கு எதிராக பாஜக குரல் கொடுத்து வருகிறது. பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், "மருத்துவம் படிக்க முன்வரும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து அதை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு. இவ்வாறு நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே நீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும், அதை விஜய் ஆதரிக்கிறேன் என்பதும் வேடிக்கையானது.
உயர்கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். என்சிஇஆர்டி-க்கென தனி பாடத்திட்டம் இல்லை. அந்த அமைப்பின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றன.
நீட் தேர்வு வந்த பிறகு பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் எத்தனை பேர் ஆண்டுதோறும் மருத்துவ இடங்களை பெறுகிறார்கள் என்பதையும், முன்பு அப்பிரிவினர் எத்தனை பேர் இடங்களை பெற்றிருக்கிறார்கள் என்பதையும் விஜய் முதலில் தெரிந்து கொண்டால் மிக்க நல்லது.
எல்லோரும் அரசியலுக்காக பேசுவதை இவரும் பேசி இருக்கிறார் என்றே கருதுகிறேன். சமூக நீதியின்படி தமிழகத்தின் இட ஒதுக்கீடு கொள்கை போலவே 100 சதவீதம் நீட் தேர்விலும் மாணவர் சேர்க்கையின்போது கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே நீட் தேர்வு எழுதுவதிலும் தமிழக மாணவர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் திட்டம் போட்டு தவறு செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி உட்பட தமிழகத்திலும் சில குளறுபடிகள் ஏற்பட்டன. அதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையும் குறை சொல்வது நியாயமாகாது.
அவர், 'ஒன்றிய அரசு' என்று சொல்லத் தொடங்கி இருப்பது கூட ஆச்சரியம் அளிக்கிறது. 'நீட்' குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பேசுகின்றன. எனவே நாமும் பேசுவோம் என்பதைதான் அவர் பேச்சிலிருந்து உணர முடிகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்யும் இணைந்திருக்கிறார்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications