பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?
சென்னை: புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தமிழிசை பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது சட்டசபை தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இடம்பெறவில்லை.
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழிசை பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்களான எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரின் பெயர்கள் உள்ள நிலையில் தமிழிசை பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் தமிழிசை முறைகேடு செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஆளுநர் மாளிகை நிதியைத் தனது சொந்தச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
எனவே, இந்தத் தேர்தலில் தமிழிசை சௌந்தராஜன் பிரச்சாரம் செய்தால் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் தமிழிசை சௌந்தரராஜன். அதன் பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2024 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார் தமிழிசை.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், "பாஜகவின் கீழ்படிதலில் தொண்டன் நான். அதனால் கட்சி சொல்லும் முடிவை நான் செய்வேன். தேர்தல் அரசியல் எனக்கு எப்போதும் விருப்பமானது. அதன் காரணமாகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இருந்த போதும் கட்சி எனக்கு என்ன பணி வழங்குகிறதோ அதை நான் செய்வேன். தமிழ்நாட்டு திசை தமிழிசையோட திசை. எந்த திசையை காண்பிக்கிறார்களோ அந்த திசைக்கு இந்த இசை பயணம் செய்யும்" என அண்மையில் தெரிவித்திருந்தார் தமிழிசை.












Click it and Unblock the Notifications