அதிமுக கூட்டணியில் பாஜக! ஜெயலலிதா பற்றி ராஜ்நாத் சிங் சொன்ன ஒற்றை வார்த்தை! மோதலுக்கு புல்ஸ்டாப்?
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என சென்னை அருகே நடந்த பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி அவர் கூறிய ஒற்றை வார்த்தை என்பது அதிமுக, பாஜக இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அதன்படி நாடு முழுவதும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்கூட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வேலூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த வேளையில் தென்சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, ‛‛தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இதற்காக நிர்வாகிகள் உழைக்க வேண்டும்'' என பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் 25 தொகுதிகளை பாஜக கேட்கிறதா? என்ற கேள்விகள் எழுந்தன.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிமுக தான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும். இந்த விவகாரத்தில் கூடுதல் தொகுதி கேட்டு அதிமுகவை எந்த கட்சியாலும் பணிக்க முடியாது என அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது ‛அது அமித்ஷாவின் தனிப்பட்ட கருத்து' என்றார்.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல்கள் உள்ளன. மேலும் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி பாஜகவுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தான் இன்று மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது ராஜ்நாத் சிங் அதிமுக கூட்டணி குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். இதுதொடர்பாக ராஜ்நாத் சிங், ‛‛தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அதிமுக தலைவியாக இருந்த ஜெயலயலிதா மீது மிகுந்த மரியாதை உள்ளது. கூட்டணி தர்மத்தின்படி அதிமுகவுக்கு மரியாதை, அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த ஒரு பேட்டியில், ‛தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது'' என பேசியிருந்தார். இதன்மூலம் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேச தகுதியில்லை என அதிமுகவினர் சாடினர். இந்நிலையில் தான் ராஜ்நாத் சிங் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உள்ளதாக கூறி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications