அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது... மாயை பிரசாரம் செய்யும் பாஜக.. . ஜெயக்குமார் அதிரடி...!
சென்னை: தமிழகத்தில் வளர்வதற்காக எதிர்க்கட்சி என்ற மாயை பிரசாரத்தை பாஜக செய்து வருவதாகவும், அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பொதுக்குழுவில் இடம்பெற உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கபோது, தமிழக அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சி விவகாரம் மற்றும் நுபுர் ஷர்மா சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார்.

தமிழக அரசு மீது விமர்சனம்
அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் இடம்பெறும். ஆன்லைன் ரம்மி க்கு தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வருவதற்கு முழு அதிகாரம் இருந்தும், குழு அமைத்திருப்பது தேவையற்றது. இது தடை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கை. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடை இல்லாமல் கிடைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

நுபுர் ஷர்மா சர்ச்சை
இஸ்லாமிய இறைதூதர் குறித்து நுபுர் சர்மா குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது என்பதோடு, அது மலிவானது செயல் என்று என்று பதிலளித்தார்.

யார் எதிர்க்கட்சி?
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்று பாஜக, பாமக, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளும் கூறி வருவது குறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தில் பாஜக தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என மாயை பிரசாரம் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

அதிமுக செயல்பாடு
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி யார் என்று அனைவருக்கும் தெரியும். அதிமுக எதிர்க்கட்சி கடமையில் இருந்து ஒருபோதும் விலகாது. யார் வந்தாலும் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கத்தை அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications