"மாட்டுக்கறி".. மேஜர் காரணமே பாஜகதான்.. "வணக்கத்துக்குரிய மாட்டை" ஏன் அறுக்கறீங்க.. தமிழரசன் ஒரே போடு
பாஜக மாட்டிறைச்சி அரசியல் செய்வதாக இந்திய குடியரசு கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது
சென்னை: யார் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் தான் மாட்டிறைச்சி வர்த்தகத்தையும் செய்கிறார்கள். அதனால், இது ஒருவகையான மறைமுக கார்ப்பரேட் அரசியல்.. இதன் பின்னணியிலும் பாஜக உள்ளது என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது..
வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும், வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. குறிப்பாக மாட்டிறைச்சி தடை குறித்த அறிவிப்புக்கு பிறகு, பசு பாதுகாப்பு அமைப்பினரால் தாக்குதல்கள் அதிகரித்து, கொலைகளும் நடைபெற்று வருகின்றன.
அதாவது, இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது...

மாட்டுக்கறி
அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்துள்ளதாகவும், பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பிறகு இது மேலும் மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது... சிறுசிறு வியாபாரிகளால், மாட்டிறைச்சி கடைகளுக்கும், மார்கெட்டுகளுக்கும் கொண்டு போய் விற்கவும் முடியாத அளவுக்கு பீதி, கலக்கம் ஏற்பட்டுள்ளன.. மற்றொருபக்கம் பசுவை போற்றி பாதுகாக்கும் முறைகளையும் வடமாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன..

புலி + பசு
இந்தியாவின் தேசிய விலங்காக புலி' இருக்கும் நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று நேற்றைய தினம் தொடரப்பட்டது...உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, "இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? நீங்கள் ஏன் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்... இதில் எந்த அடிப்படை உரிமை மீறப்படுகிறது... நீங்கள் நீதிமன்றத்துக்கு வருவதால் நாங்கள் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட வேண்டுமா?" என்று காட்டமாக கூறி எச்சரித்திருந்தது.

மாட்டுக்கறி
இந்நிலையில், தமிழ்நாடு மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாராயணப்பன் தெரு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 அம்ச கோர்க்கைகளையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இடி முழக்கம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் மாட்டிறைச்சி அறுவை கூடங்களை அரசு அமைத்து தரவேண்டும்... தமிழகம் முழுதும் பழுதடைந்துள்ள மாட்டிறைச்சி அறுவை கூடங்களை புதுப்பித்து தரவேண்டும்.. மதம் சார்ந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரசு பொது விடுமுறை காலங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை தட்டி பறிக்கும் வகையில் இறைச்சிக் கூடங்களை வலுக்கட்டாயமாக மூட கட்டாயப்படுத்தக்கூடாது, இதுபோன்ற அரசு ஆணைகளை தடைசெய்ய வேண்டும், மாட்டிறைச்சி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1860 இல் 2017, 2021 -ல் உருவாக்கப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

மாட்டிறைச்சி
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பசுவதை தடுப்புச் சட்டம் என்பது தமிழகத்தில் இல்லை.. ஆனால் அந்த சட்டம் நடைமுறையில் இருப்பது போல அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இதன் பின்னணியில் மத அரசியல் மட்டுமின்றி கார்ப்பரேட் அரசியலும் இருக்கிறது.. இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2வது இடத்தில் இருக்கிறது... யார் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் தான் மாட்டிறைச்சி வர்த்தகத்தையும் செய்கிறார்கள். அதனால், இது ஒருவகையான மறைமுக கார்ப்பரேட் அரசியல்.. இதன் பின்னணியிலும் பாஜக உள்ளது...

கோமாதா
70 வருடங்களுக்கு முன்னரே அண்ணல் அம்பேத்கர், உங்கள் வணக்கத்திற்குரிய மாடுகளை இறந்தபிறகு மட்டும் ஏன் அறுக்க கொடுக்கிறீர்கள்? இதுதான் நீங்கள் கோமாதாவுக்கு செலுத்துகிற மரியாதையா? உண்மையான வழிபாடா?" என்று கேட்டார்.. அதை தான் நானும் இப்போது கேட்கிறேன்.. பலர் மாட்டிறைச்சிக்காக கொல்லப்படுகிறார்களே, மனிதனின் உயிரை விட மாட்டிறைச்சி முக்கியமானதா?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications