கண்ணு தெரியலயா.. நடுத்தெருவில் முஸ்லிம்கள்.. பழிக்குப்பழி வாங்குதே பாஜக.. சீமானுக்கு வந்த ஆவேசம்
உத்தரகாண்ட் மாநில பாஜகவுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: இசுலாமியப் பெருமக்களின் குடியிருப்புகளை இடித்து 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்தும் செயலினை உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்..
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானியில் உள்ள 29 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆகிரமித்து மக்கள் வசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பகுதியில் 4000க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வீடுகள் தவிர, இப்பகுதியில் நான்கு அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், ஒரு வங்கி, இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 10 மசூதிகள் மற்றும் நான்கு கோயில்கள், கடைகள் ஆகியன உள்ளன.

நறுக் கேள்வி
விதிமுறைகளுக்கு மீறி இங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், 4500 வீடுகளை இடிக்க மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.. அந்தவகையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அறிக்கை வெளியிட்டு, பாஜக அரசுக்கு நறுக்கென கேள்விகளை கேட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் அருகேயுள்ள ஹல்த்வானி ரயில்நிலையம் அருகே கடந்த ஒரு நூற்றாண்டுகளாக வசித்து வரும் ஏறத்தாழ 4000 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க முயலும் அம்மாநில பாஜக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

உள்நோக்கம்
இஸ்லாமியர்கள் என்பதாலேயே உள்நோக்கத்துடன் 50 ஆயிரம் மக்களை வீதியில் நிறுத்த முனைவது பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி மனப்பான்மையே வெளிப்படுத்துகிறது. இசுலாமியப் பெருமக்கள் கணிசமாக வசிக்கும் நைனிடால் பகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்த காரணத்தினாலேயே பழிவாங்கும் நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு என்றுகூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முனைகிறது.

குடிபெயர்ந்தனர்
ஆக்கிரமிப்பு என்றால் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக அவர்களை அப்பகுதியில் வசிக்க அரசு எவ்வாறு அனுமதித்தது? அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, எரிகாற்று இணைப்பு எவ்வாறு வழங்கியது? அவற்றை வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வாக்கு கேட்டு அப்பகுதிக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும்போது தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? அல்லது ஆக்கிரமிப்பு என்று தெரிந்தே அனுமதித்தீர்களா? அம்மக்கள் அங்குக் குடியேறும்போதே வெளியேறச் சொல்லியிருந்தால் அவர்கள் வேறு இடத்திற்குக் குடி பெயர்ந்திருப்பார்கள்.

இரவோடு இரவாக
அதை விடுத்து மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து, பல்லாயிரம் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்துச் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்களது வாழ்நாள் கனவாக இலட்சக் கணக்கில் செலவழித்துக் கட்டிய வீட்டினை ஒரே நாளில் இரவோடு இரவாக இடித்து வெளியேற்றுவது என்பது கொடுங்கோன்மையாகும். ஆகவே, உத்திரகாண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு நைனிடால் பகுதியில் வசிக்கும் இசுலாமியப் பெருமக்களின் வீடுகளை இடித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications