ஆளே இல்லாத கட்சி ஆட்டம் போடுகிறது..கெடு விதிக்கிறது..இதற்கெல்லாம் காரணம்..பாஜகவை விளாசிய திருமாவளவன்
ஆளே இல்லாத கட்சி இங்கு ஆட்டம் போடுகிறது. வாலாட்டுகிறது. தொட்டுப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறது என்று பாஜகவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை: ஆளே இல்லாத கட்சி இங்கு ஆட்டம் போடுகிறது. வாலாட்டுகிறது. தொட்டுப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறது. 24 மணி நேரம் கெடு கொடுக்கிறது.. இதற்கெல்லாம் அதிமுகவின் பலவீனமே காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, 24 மணி நேரம் தருகிறேன் முடிந்தால் திமுக அரசு கைது செய்து பார்க்கட்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சை விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ஆளே இல்லாத கட்சி ஆட்டம் போடுகிறது.. தொட்டுப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறது என்று சாடியுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது:-

ஆளே இல்லாத கட்சி வாலாட்டுகிறது
திமுக மேடைகளில் அதிமுவின் நடவடிக்கைகளை விமர்சித்தும் எதிர்த்தும் கண்டித்தும் பேசுவதுண்டு. ஆனால் இன்று பாஜகவின் நடவடிக்கைகளை விமர்சித்து பேசக்கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு அதிமுக வலுவிழந்து நிற்கிறது. ஆளே இல்லாத கட்சி இங்கு ஆட்டம் போடுகிறது. வாலாட்டுகிறது. தொட்டுப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறது. 24 மணி நேரம் கெடு கொடுக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அதிமுகவின் பலவீனம்.

சித்து வேலைகளை செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம், ஜீரோ, சைபர்.. ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து இருப்பதால் தமிழ்நாட்டில் வாலாட்டி கொண்டு இருக்கிறார்கள். எனவே நாம் பாஜகவை தமிழ்நாட்டில் ஒன்றும் இல்லாத கட்சி என்று கடந்து போய்விடக்கூடாது. ஆளில்லாத கட்சி என்று பேசாமல் இருந்து விட முடியாது. என்னனென்ன சித்து வேலைகளை செய்கிறார்கள். மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை எல்லாம் இப்போது நாம் உணரத்தொடங்கியிருக்கிறோம்.

இங்கே எதையும் சாதிக்க முடியவில்லை
பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாகவே தமிழகத்தில் காலூன்றுவதற்கு பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களால் இங்கே எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களின் ஜம்பம் எடுபடவில்லை. கலைஞர் இல்லை என்பதாலும் அதிமுகவிற்கு வலுவான தலைமை என்பதாலும் எப்படியாவது இங்கு குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சமூக பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் கவனத்தை ஈர்த்து காலூன்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறது பாஜக.

வதந்திகளை பரப்புவார்கள்
இது எல்லாம் கற்பனை அல்ல.. யூகங்கள் அல்ல.. பாஜகவின் செயல் தந்திரங்களில் இவையெல்லாம் அடங்குகின்றன. வட மாநிலங்களில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் ஆட்சி அதிகாரத்தை எப்படி பிடித்தார்கள் என்று எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்தால் அவர்கள் ஒரு உத்தியை தெளிவாக கையாண்டு வருகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் சமூக பதற்றத்தை உருவாக்குவது அவர்களின் ஒரு யுக்தி. அதற்காக எத்தகைய அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்புவார்கள். வெறுப்பு அரசியலை விதைப்பார்கள். அப்படித்த்தான் இந்திய அளவில் அவர்கள் வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

வெறுப்பு அரசியல்
பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. மதவாத்தை பேசுகிற கட்சி என்று மக்கள் ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் சமூக பதற்றத்தின் மூலம் வன்முறை வெறியாட்டங்கள் மூலம் முஸ்லீம் வெறுப்பின் மூலம் கிறிஸ்தவ வெறுப்பின் மூலம் இந்துக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்துக்களின் நலன்களை பேசவில்ல்லை. அடிப்படை தேவைகள் பற்றி பேசவில்லை. இந்துக்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து, பொருளாதாரத மேம்பாடு, கல்வி , பாதுகாப்பு பற்றி பேசவில்லை. முஸ்லீம் வெறுப்பில் இந்துக்களை அணி திரட்டினார்கள். வெறுப்பு அரசியல்... இங்குள்ள முஸ்லீம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications