என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார்
சென்னை: எனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை மிகவும் கொச்சையான விதத்தில் பேசிய யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா சிவா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவுச் செயலாளரும், இந்தியாவின் முன்னணி ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா நேற்று அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

யூடியூபர்களான முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவரும் தனது குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, கண்ணீர் மல்க இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலிஷா அப்துல்லா, தனது ஆவேசத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தினார்.
குழந்தைகள் மீதான அவதூறு: தான் அரசியலில் நுழைந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், சுமார் 12 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோ தம்மைக் கடுமையாகப் பாதித்ததாகக் கூறினார்.
அதில், தனது இரட்டைக் குழந்தைகளைப் பற்றிப் பேசியதோடு, ஒரு குழந்தை என் முக ஜாடையில் இருப்பதாகவும் இன்னொரு குழந்தை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைப் போல இருப்பதாகப் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பதிவிட்டதே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றார். தனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆனநிலையில் தனது உடல்நலம், மனநலம் எப்படி இருக்கும் என்பதை கூட தெரியாமல் இது போல் அவதூறாகவும் கொச்சையாகவும் பேசி வருகிறார்கள் என அலிஷா வேதனை தெரிவித்தார்.
கடும் எச்சரிக்கை: இந்த விவகாரத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்று எச்சரித்த அலிஷா, "அவர்கள் இருவரையும் செருப்பால் அடிக்க வேண்டும். காவல்துறை அவர்களைக் கைது செய்யத் தவறினால், நானே களத்தில் இறங்கி வேறு வழியில் நடவடிக்கை எடுப்பேன்" என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
அரசியல் தொடர்பு: அண்மையில் யூடியூபர் முக்தார், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததையும் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய த.வெ.க. அரசு இந்த இருவர் மீதும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இப்புகார் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் தாம் சுமார் 10 நிமிடங்கள் விரிவாகப் பேசியதாகவும், அவதூறு பரப்பியவர்கள் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உறுதியளித்துள்ளதாகவும் அலிஷா அப்துல்லா தெரிவித்தார்.
புகாருக்குள்ளாகியிருக்கும் யூடியூபர் முக்தார், ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications