இழிவான பேச்சு.. ஆ.ராசாவை கண்டிக்காத திமுக..உத்தம ராமசாமியை கைது செய்வதா? - அண்ணாமலை
இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக எம்.பி.ஆ. ராசாவை திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ஆ. ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்வதா என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 5ம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் ஆ.ராசாவின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

உத்தம ராமசாமி கைது
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார் . உத்தம ராமசாமி பேசிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தமராமசாமியை போலீசார் கைது செய்தனர்.

பாஜகவினர் மறியல்
இந்தநிலையில், கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பீளமேடு காவல்நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தம ராமசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 நாட்கள் சிறை
உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவையில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சிவராம் நகரில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ. ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் திரு ஆ. ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

இழிவான பேச்சு
மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ. ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications