'கை சின்னத்துக்கு கூட 5 விரல் இருக்கு, ஆனால்'.. கே.எஸ்.அழகிரியை பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை!
சென்னை: ராகுல் காந்திக்காக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி நான்கு பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். இதேபோல் பாஜகவினரும் கிண்டல் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்து வந்த சில மணி நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நான்கு பேர் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மேற்கு மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் கும்பகோணம் மாநகரத் தலைவர் மிர்சாவூதீன் பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

கேஎஸ் அழகிரி மறியல்
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரயில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இந்த ரயிலில் தான் கே.எஸ். அழகிரி சென்னை செல்வதாக இருந்தது. போராட்டம் முடிந்த பின்னர் கே.எஸ். அழகிரியை ரயிலில் ஏற்றி அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அதானிக்கு சொந்தமானதா
முன்னதாக கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், " ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்த பாஜக விரும்புகிறது. அவரை நசுக்கி அவரது வளர்ச்சியை தடுக்க பார்க்கிறது. ஐரோப்பிய நாடுகள் இன்றும் இந்திய ஜனநாயகத்தை பற்றி பெருமையாக பேசி வருகின்றன. ஆனால் பாஜகவோ ஜனநாயகத்தை நாடாளுமன்றத்தில் செயல்பட விடாமல் முடக்கி கொண்டே வருகிறது. இது குறித்து கருத்து கூறினால் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் குற்றச்சாட்டு எழுப்புகின்றன. பா ஜனதாவுக்கு எதிராக கருத்து கூறினால் அது தேசவிரோதம் ஆகுமா?. இதனை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினால் அதையும் தேச விரோதம் என பாஜக கூறி வருகிறது. இந்தியா, அதானிக்கு சொந்தமானதா? என எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

நாலு பேர்
இந்நிலையில் ராகுல் காந்திக்காக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி நான்கு பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை பேசும் போது, "அண்ணன் கேஎஸ் அழகிரி ரயில்வே தண்டவாளத்தில் நின்று இருக்கிறார்.. எனக்கு கூட ஒரு சந்தேகம்... ஏன்னா திமுககாரர்களும், காங்கிரஸ்காரர்களும் பலே கில்லாடிகள்.. எந்த தண்டவாளத்தில் ரயில் வராதோ அங்கு தான் போய் நிற்பார்கள்.. அது இவங்க ரத்தத்திலேயே இருக்கும். நேற்று காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள், சத்தியாமாக சொல்கிறேன், அவரு, கூட 3 பேரு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.. எதுக்கு ரயிலை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டால், ராகுல் காந்திக்கு இரண்டு வருசம் தண்டனை கொடுத்துட்டாங்க.. அதனால் ரயிலை நிறுத்த போறாம் என்றார்கள். நான் கேட்கிறேன், ஏன்யா.. காங்கிரஸ் கைசின்னத்திற்கே ஐந்து விரல்கள் இருக்கிறது. நீங்க நாலு பேரா வந்திருக்கிறீர்கள்.. கைசின்னத்துல உள்ள ஐந்து பேர் கூட இல்லாமல், நான்கு பேர் வந்து தமிழக காங்கிரசில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளீர்கள்.. உங்களால் ஒரு எருமை மாட்டக்கூட நிறுத்த முடியாது. நீங்கள் ரயிலை நிறுத்த போறீங்களா?.. " இவ்வாறு அண்ணாமலை கிண்டல் செய்து பேசினார்.

ராகுலை பற்றியே பேச்சு
ஒரு பக்கம் கிண்டல்கள் செய்யப்பட்டாலும் மறுபக்கம் ராகுல் காந்திக்கு நடந்தது அநீதி என்று பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டங்களை எழுப்பி வருகிறார்கள். மொத்த சமூக வலைதளமும் கடந்த 3 நாட்களாக ராகுல் காந்தி தான் பேசப்படுகிறார். ராகுல் காந்திக்காக அனைத்து எதிர்க்கட்சிகளுமே கடும் கண்டனங்களை வெளிப்படுத்தி உள்ளன.

தன்னெழுச்சி போராட்டம்
காங்கிரஸ் கட்சியினரும் தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். நேற்று பல இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்தது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் வரும் திங்கள் அன்று பெரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications