பாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்?
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம், பாஜக முக்கிய மாநகராட்சிகளை கேட்டு பெற பல்வேறு வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.
நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜக கணிசமான மாநகராட்சிகளை கேட்டு பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

திண்டுக்கல்
தமிழகத்தில் ஆவடி, கோவை, ஓசூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், சென்னை, திண்டுக்கல், நாகர்கோவில், தஞ்சை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 5 மாநகராட்சிகளையாவது பாஜக கேட்டு பெறும் என தெரிகிறது.

பாஜகவுக்கு வெற்றி
அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்ததால்தான் பாஜகவுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்பது எதார்த்தம். குறிப்பாக அதிமுக வலுவாக உள்ள மேற்கு மண்டலத்தில் பாஜகவுக்கும் செல்வாக்கு கூடியிருக்கிறது. இதனால் கோவை, சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாகர்கோவில், சென்னை ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிட பாஜக விரும்பும் என்று தெரிகிறது.

ஈபிஎஸ்
அண்மையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது அதிமுகவை கைப்பற்றத் துடிக்கும் சசிகலாவின் செயல்பாடுகள், அதிமுக உள்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக
ஒரு வேளை சசிகலா அதிமுகவை கைப்பற்றினால், நிச்சயம் அவர் ஜெயலலிதா பாணியையே பின்பற்றுவார். அப்போது கட்சியில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். இந்த பிரச்சினை உள்ளிட்ட சில முக்கிய விவகாரங்களை தீர்க்க பாஜகவின் தயவு அதிமுகவுக்கு தேவை.

விரும்பும் மேயர் இடங்கள்
எனவே அவர்கள் கேட்கும் மாநகராட்சிகளை அவர்களுக்கு ஒதுக்குவதை தவிர வேறு வழியே இல்லை என்கிறார் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில் தாங்கள் விரும்பும் மேயர் இடங்களை பாஜக கேட்டுப் பெறும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications