ஆயுதப் பூஜையில் கூட சாமி படம், சிலைக்கு தடையா? திமுக இந்து விரோத அரசுதான் - கொந்தளித்த பாஜக நாராயணன்
சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் எந்த மத கடவுள்களின் படங்கள், சிலைகளும் இடம்பெறக்கூடாது என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றறிக்கை வெளியிட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வது பூஜை பண்டிகைகள் வர இருக்கும் நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வெளியிட்டதாக ஒரு சுற்றறிக்கையை தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், "மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த ஒரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம் / சிலை வடிவில் பயன்படுத்தக் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம் / சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை பகிர்ந்து உள்ள நாராயணன் வெளியிட்டு உள்ள கண்டன பதிவில், "திமுக ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை!
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்வில் ஹிந்துக் கடவுள்களின் படங்கள் தான் இடம் பெறுமேயன்றி வேறு எந்த மதத்தை சார்ந்த புகைப்படம் பயன்படுத்தப்படும்? தமிழகத்தின் ஒவ்வொரு கட்டிடமும் பூமி பூஜை செய்தே கட்டப்பட்டவை என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கும் நோயாளிகளும், மருத்துவர்களும் சாமியை கும்பிட்டு விட்டே நலம் பெறுவார்கள் என நம்பிக்கையோடு சிகிச்சை பெறுகின்றனர் அல்லது அளிக்கின்றனர் என்பதை அரசு உணர வேண்டும். சாமி படம் இருப்பின் எதிர்கால பிரச்சினைகள் என்ன நேரிடும் என அரசு விளக்க வேண்டும்.
இன்று படங்களை, சிலைகளை அகற்ற சொல்லும் அரசு, பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட தைரியம் உள்ளதா? சிறுபான்மையினரை தாஜா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓட்டுக்காக இது போன்ற மலிவான செயல்களில் ஈடுபட்டு, மருத்துவர்களின், நோயாளிகளின், பொது மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கிருஸ்துவ மத பிரச்சாரகர்கள் அனைத்து வார்டுகளிலும் சென்று மத பிரச்சாரம் மற்றும் மத மாற்றத்தில் ஈடுபடுவதை என்றேனும் இந்த ஹிந்து விரோத அரசு எதிர்த்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும். அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வதே மத சார்பற்ற அரசு என்பதற்கு பொருள்; மாறாக, ஒரு மதத்தை அழிக்க நினைப்பது, வசைபாடுவது என்பது மதவாத அரசாகவே கருதப்படும். இந்த சுற்றறிக்கையினை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையினர் திரும்பப் பெற வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications