பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு ஸ்டாலினை சந்திப்பாரா..? ஷாக் சம்பவம் இருக்கா? என்ன நினைக்கிறது திமுக?
சென்னை : ஜூலை மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வரும் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் வர இருக்கிறார். அவர் அதிமுக, பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறார்.
அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழிமொழிய உள்ள நிலையில், இந்த சந்திப்புக்கு வாய்ப்பில்லை என திமுக தரப்பில் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

வேட்பு மனு தாக்கல்
பாஜக வேட்பாளரான திரௌபதி முர்பு நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத், தம்பிதுரை ஆகியோரும் பங்கேற்றனர்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா வரும் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை முன்மொழிவதற்காக தி.மு.க சார்பில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லி செல்ல இருக்கிறார். யஷ்வந்த் சின்ஹா, ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களில் தனக்கு ஆதரவு கேட்டு முடித்துவிட்டு, அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகம் வருகிறார். முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

பொது வேட்பாளர்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா பல்வேறு கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதரவை கேட்டுக்கொண்டார். அத்துடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
Recommended Video

திரௌபதி முர்மு
இதற்கிடையே, பா.ஜ.க வேட்பாளரான திரௌபதி முர்மு, பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் பா.ஜ. மாநிலத் தலைவர்கள், பிற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கிறார்.

சென்னை வரும் முர்மு
ஜூலை முதல் வாரத்தில் சென்னை வரும் திரௌபதி முர்மு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினை இந்தப் பயணத்தின்போது திரௌபதி முர்மு சந்தித்து ஆதரவு கோருவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரிடமும் ஆதரவு கேட்டு வரும் நிலையில், திரௌபதி முர்முவும் அரசியல் நாகரீகம் பாராட்டும் முயற்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

எளிதாக
நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 10,86,431. அதில் சுமார் 48 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய, பா.ஜ.க கூட்டணி வாக்குகள் தவிர்த்து சுமார் 10,000 வாக்குகள் மட்டுமே கூடுதலாக தேவைப்படுகிறது. இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

திமுக
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த வாக்கு மதிப்பான 76,378-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 எம்.பிகளை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக முக்கியப் பங்கு வகிக்கும்.

சந்திப்பு நடக்குமா?
பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா எனும் கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ள நிலையில், திமுக தரப்பினர் அந்தச் சந்திப்பு நடப்பது கடினம் தான் என்கின்றனர். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழிமொழிய உள்ளார். இந்த விஷயத்தில் திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளதால் இந்தச் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என திமுக தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications