பாஜகவின் விநாயகர் சதுர்த்தி ஆயுதம்...எடுபடாதது ஏன்? முதல்வரின் திறமையா? கள நிலவரம் என்ன?
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதியாக பிரச்சினைகளை கையாளுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில் பாஜக கையிலெடுத்த அஸ்திரமான விநாயகர் சதுர்த்தி எனும் ஆயுதம் எடுபடாமல் போனதற்கு காரணம் முதல்வர் எளிதாக கையாண்டதா? பாஜகவின் அரசியல் வியூகத்தில் ஏற்பட்ட பின்னடைவா? என்ன காரணம். அலசுவோம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக மக்களை திரட்ட
இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் மனதை ஒருங்கிணைக்க எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஆயுதம் விநாயகர் சதுர்த்தி விழா. எடுத்தவர் காங்கிரஸில் தீவிரவாத தலைவர் என்று அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர். வெள்ளைக்காரர்களுக்கு எதிராக காந்திக்கு முன்னரே மக்களை ஒருங்கிணைத்தவர் திலகர். அவர் உருவாக்கிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பின்னர் வேறு வேறு வழிகளில் பயணித்தது.

பக்திக்காக மக்களும், தங்கள் அரசியல் வியூகத்துக்காக அரசியல் கட்சிகளும் பயன்படுத்தினர். விநாயகர் முழுமுதற்கடவுள் என மக்களால் வணங்கப்படும் கடவுள். இந்தியா முழுவதும் மக்களால் நேசிக்கப்படும், இன்னும் சொல்வதென்றால் கடவுளை தனக்கருகில் வைத்து விருப்பப்பட்ட வடிவங்களில் அவரை வைத்து கொண்டாடுகின்றனர் மக்கள். சுபநிகழ்வுகள் விநாயகர் இல்லாமல் தொடங்குவதில்லை. அதனால்தான் பிள்ளையார் சுழி என்று அழைக்கின்றனர்.
கையிலெடுத்த அரசியல் கட்சிகள்
திலகருக்குப்பின் இந்துத்துவ அமைப்புகள், பாஜக, சிவசேனா போன்றவை விநாயகர் சதுர்த்தியை ஒட்டிய ஊர்வலத்தை கையிலெடுத்தன. அவரவர் வலிமையைக்காட்டும் நிகழ்வாக இத்தகைய ஊர்வலங்கள் நடந்தன. இந்தியாவில் கொரோனா அலைக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகப்பிரம்மாண்டமாக நடக்கும் ஒரு திருவிழாவாக இருந்தது. உலக நாடுகள் வியந்து பார்க்கும் ஊர்வலம் அது.
அதேபோல் மற்ற மாநிலங்களிலும், தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பிரதானமாக இந்து அமைப்புகள் கையிலெடுக்கும் விழாவாக இருந்தது. கொரோனா பேரிடர் காரணமாக மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதல் காரணமாக சில ஆண்டுகளாக ஊர்வலம் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு இரண்டாம் அலை ஓய்ந்திருந்தபோதும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை, காரணம் மூன்றாம் அலை அச்சமே. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்திருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை பெரிதளவில் எட்டப்படவில்லை. முதல் டோஸை 50% மக்கள்கூட போடவில்லை.
தடைக்கு இதுதான் காரணம்
அதுவுமில்லாமல் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரிப்பதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை மத விழாக்கள், ஊரவலங்கள் உள்ளிட்ட பொதுவிழாக்களை அனுமதிக்க வேண்டாம் என மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இது முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு பணி சம்பந்தப்பட்டது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடப்படுவதை தடை செய்து அரசு முடிவெடுத்ததில் பாஜக தமிழக தலைமை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியது,
அரசியல் விமர்சகர்களின் கருத்து
"தமிழகத்தில் எதையாவது செய்து கட்சியை வளர்க்கும் துடிப்பில் உள்ள பாஜக தலைமை இந்த ஆண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்துவதை தடை செய்த விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் செய்ய முடிவெடுத்தது. ஏற்கெனவே இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாத முதல்வர், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும் ஆட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில் இந்த ஆயுதம் மிகுந்த பயன் தரும் என்று நினைத்தது பாஜக.
பல அதிகார மையங்களை கையில் வைத்துள்ள அரசு அனைத்தையும் ஆராயும் என்பதை அறியாமல், அல்லது விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் தங்கள் கட்சி தலையிடாமல் இருந்தால் பின் தங்கிவிடுவோம் என்கிற அழுத்தம் காரணமாக பாஜக தமிழக தலைமை இந்த முடிவை எடுத்து களத்தில் குதித்திருக்கலாம். பொதுவாக திமுக பெரியார் பாதையில் நடக்கும் கட்சி இந்து மத உணர்வை மதிக்கவில்லை என்பதுபோல் இந்த விவகாரத்தை கொண்டுச் செல்லலாம் என்று கணக்கிட்டதை தவறு என்று சொல்ல முடியாது.
யதார்த்ததை மறந்தார்களா பாஜக தலைமை
ஆனால் ஒரு உண்மையை பாஜக தமிழக தலைமை மறந்ததுதான் பின்னடைவுக்கு காரணம். தமிழகம் மட்டுமல்ல பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு இதே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும், விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு பேர்போன மஹாராஷ்டிராவே இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த தடை விதித்திருப்பதையும் ஏனோ கவனிக்கதவறி விட்டார்களா தெரியவில்லை.
மேலும் பேரிடர் கால வழி காட்டுதலில், கட்டாயம் மத்திய அரசின் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றித்தான் மாநில அரசுகள் நடக்க முடியும், இந்த அம்சங்களை தமிழக பாஜக தலைமை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசை விமர்சித்ததும், ஆட்சியை பிள்ளையாரே பார்த்துக்கொள்வார் என்று கருத்து தெரிவித்ததும் பொதுவான மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத கோஷமாக அமைந்துவிட்டது எனலாம்" என்று தெரிவித்தனர்.
சட்டப்பேரவையிலும் சறுக்கல்
சரியான அரசியலை கையிலெடுக்க முடியாதாதால் சட்டப்பேரவையிலும் இதுகுறித்த பாஜகவின் வாதத்தை யாரும் ஆதரிக்காமல் தனிமரமாக பாஜக நிற்கும் நிலை ஏற்பட்டது. சட்டத்தின் காவலராக இல்லாமல், சவால் விட்டு பேசாமல் பிரச்சினையை அமைதியாக கையாண்ட முதல்வர் சக அரசியல் தலைவர்போல் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், எங்கள் நோக்கம் அதுவல்ல, மத்திய அரசின் பேரிடர் கால வழிகாட்டுதலை பின்பற்றுகிறோம் என்று பதிலளித்து, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இதே நிலை பின்பற்றுவதாக தெரிவித்து இன்று போய் நாளை வாருங்கள் என்பதுபோல் பாஜகவின் ஆயுதங்களை எளிதாக கைகொண்டார்.
மறுநாளும் பாஜக இதே பிரச்சினையை வேறு வடிவில் பக்தர்ளை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடாமல் தடுக்கிறீர்கள் என்பது போன்ற குற்றச்சாட்டை வைத்தபோது, நான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடக்கூடாது என்று சொல்லவில்லையே, பொது இடத்தில் கூட்டம் கூடி சிலை வைத்து கொண்டாட வேண்டாம் என்றுதான் கேட்கிறோம், அதுவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி என எளிதாக பதிலளிக்க பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதற்கு மேல் இதில் என்ன சொல்வது என்று மவுனமாகிவிட்டனர்.
மக்கள் பிரச்சினையும் முக்கியமல்லவா?
மொத்தத்தில் மிக சென்சிடிவான திமுகவுக்கு எதிராக எளிதாக பிரச்சினை திரும்பும் என பாஜக தமிழக தலைமை வகுத்த வியூகம் இம்முறை முதல்வரின் எளிமையான அணுகுமுறையால் வீழ்த்தப்பட்டுள்ளது. மற்றொருபுறம் பெருவாரியான மக்களின் கோபம் விலைவாசி உயர்வு, கொரோனா காலத்தில் வருமானமின்மை, வேலையிழப்பு போன்றவற்றில் உள்ளதால் இதுபோன்ற வியூகங்கள் வெற்றிபெறுவது சாத்தியமில்லா ஒன்று.
மத்தியில் ஆளும் ஒரு தேசியக்கட்சியின் தமிழக கிளை எப்போதும் தேசியக்கட்சியின் பாதிப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும், இதை காங்கிரஸ் கட்சியும் அனுபவித்துள்ளது. தற்போது பாஜக சந்திக்கிறது. மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையின்மை, மத்திய அரசின் மீதுள்ள மக்களின் கோபம் இவற்றை கணக்கில் கொள்ளாமல் காய்களை நகர்த்துவது மேலும் பின்னடைவையே தரும் என்பதே நிதர்சனம்.
இதுதான் காரணமா?
பாஜகவின் வியூகம் எடுபடாமல் போனதற்கு முதல்வர் அதை கையாண்ட விதம் என்பதைவிட புறச்சூழ்நிலையின் யதார்த்தம் புரியாமல் பாஜக தலைமையின் நகர்தலே காரணம் என்கிற அரசியல் விமர்சகர்களின் கூற்றை மறுக்க முடியாது என்பதே உண்மை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதியாக பிரச்சினைகளை கையாளுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில் பாஜக கையிலெடுத்த அஸ்திரமான விநாயகர் சதுர்த்தி எனும் ஆயுதம் எடுபடாமல் போனதற்கு காரணம் முதல்வர் எளிதாக கையாண்டதா? பாஜகவின் அரசியல் வியூகத்தில் ஏற்பட்ட பின்னடைவா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications