Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'திமுக தலைமை' என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பாஜக ஏஎன்எஸ் பிரசாத் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாக பேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு இப்படி பேசினாலும் கூட தமிழ்நாட்டில் ஆரியம் வெற்றி பெறாது என்று நீண்ட அறிக்கையை வெளியிட்டு அவர் கஸ்தூரியை விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் தான் கஸ்தூரியின் சர்ச்சைக்கு ஆரியத்தை இழுத்து பேசிய ஆ ராசாவுக்கு பாஜக செய்தி தொடர்பாக ஏ.என்.எஸ் பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, 'திமுக தலைமை' என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கு மக்கள் பற்றி நடிகை கஸ்தூரி பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக கஸ்தூரி மீது சென்னை, மதுரை, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கஸ்தூரியின் பேச்சுக்கு பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம்பி ஆ ராசாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,‛‛தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவர்கள் என சர்ச்சை கருத்தை சொல்லிவிட்டு, அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுகிறார். தெலுங்கர்களை மட்டுமல்ல, பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார்.

bjp-spokesperson-ans-prasad-opposes-a-raja-after-he-criticized-to-kasturi-with-usin-the-word-of-ari

அந்தப்புரத்து சேவர்கள் என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாக சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தை பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? இந்து கோவில்களுக்கு பெண்களை நேர்ந்து விடுவதை சட்டத்துக்கு புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்பு சட்டத்தை சென்னை மகாணா சட்டமன்றத்தில் 1947 ல் நிறைவேற்றி தேவாசிகளுக்கு திருமணம் செய்யும் உரிமையை பெற்று தந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றி பெறாது என கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் கஸ்தூரியின் கருத்துக்கு ஆரியத்தை இழுத்து பேசியதற்கு தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டாக்டர் அம்பேத்கர் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 'ஆரிய - திராவிட' இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்?. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர்.

கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள். அவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர்" என்று நீதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார். இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம் மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதை தான் ஆரிய - திராவிட இனவாதம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆரிய - திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று கூறியிருக்கிறார். இதை வசதியாக மறைத்துவிட்டு ஆராசா போன்றவர்கள் ஆரிய - திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அனைவரும், தங்களை 'இந்துக்களாக உணர்ந்தால்' ஜாதி வேறுபாடுகள் அறவே ஒழியும். அதற்கான முயற்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனங்களில் இருந்து ஜாதி வேறுபாடுகளை களைய ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் ஆற்றிய பணிகளை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதி வேறுபாடுகளை களைய, மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த களப்பணியாற்றி வருகிறது. அதற்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த தேவரஸ், 'தீண்டாமை பாவம் இல்லை என்றால், இந்த உலகில் வேறு எதுவும் பாவமில்லை' என்று கூறியிருக்கிறார். இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை இதைவிட யாரும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட முடியாது.

ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்ப அரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இது போன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.

இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவு சொல்லாக கருதும் 'பார்ப்பான்' என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதுகின்றனர். அவர்கள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுக்க வந்தவர்களையே விரட்டியடிக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதனால்தான், பிராமணர்கள் தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டண உயர்வால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் என்று அனைத்தும் உயர்ந்து விட்டன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் 'இனவாத அரசியலை' திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆராசா கூறுகிறார். 'அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது உண்மையானால் 'திமுக தலைமை' என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா?.

பெரம்பலூர் பொது தொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத் தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா?பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இது பிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை.

'தந்தை - மகன் - பேரன்' என்று கட்சி தலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது'' என காட்டமாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+