கஞ்சா கடத்தலில் குஜராத் டாப் என்ற பொன்முடி.. அண்ணாமலைக்கு கடும் கோபம்.. காரசார அறிக்கை
சென்னை: இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, பதுக்கல் அதிகரித்து உள்ளது. அதனை தடுக்க கஞ்சா 2.0 என்று பெயரிட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் சென்னையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டின் பெரும் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர். தொடர்ந்து சென்னையில் நேற்று செய்தியாளர்களின் சந்தித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமைச்சர் பொன்முடி பேச்சு
தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியாவசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள்தான். குஜராத் உள்பட வட மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருள் தமிழ்நாட்டிற்குள் வருகிறது. இதில் மத்திய அரசு தான் காரணம் என்று கூறி இருந்தார்.

அண்ணாமலை கண்டனம்
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் உச்சத்தில் உள்ளது. வாட்ஸ் அப்பில் வரும் பொய்யான தகவல்களை வைத்து அமைச்சர் பேசியது வேடிக்கையானது.

பொய்கள்
2021ம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னரே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் போதைப்பொருட்கள் பிடிபடுகிறது. அது என்ன தனியார் துறைமுகமா?. சமூகவலைதளங்களில் திமுகவினர் பரப்பும் பொய்களை சேகரித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் நடத்தியுள்ளார்.

மது ஆலைகளை மூடுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது. திமுகவின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications