பாஜக எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதில்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷாவும் கூறவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமித்ஷா அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் தமிழ்நாட்டில் 2026ல் கூட்டணி ஆட்சி தான் என்று கூறி வருகிறார்கள். அதிக சீட் வாங்கி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். அமித்ஷா கூட்டணி ஆட்சியை விரும்புவதாகவும் கூறி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத ஒன்றாக கூட்டணி ஆட்சிக்கு அதிமுக ஒப்புக்கொண்டதா என்று கேள்விகள் எழுந்தன.

இதுபற்றி சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதாவது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு பங்கு வழங்கப்படுமா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "பாஜக அதிமுக (நாங்கள்) இணைந்து அமைத்திருப்பது வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது தேர்தலில்தான் தெரியும். வருகிற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
சேருகின்ற வாக்குகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எதிரிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து உள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல் கட்டமாக பா.ஜ.க. எங்களுடன் இணைந்துள்ளது. எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. ஆனால் எந்த கட்சிகள் வரும் என்பதை வெளியில் சொல்ல இயலாது. சிலவற்றை தான் வெளியில் சொல்ல முடியும்.
அ.தி.மு.க. எங்கள் கட்சி. நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதற்கு தி.மு.க.வினர் ஏன் எரிச்சல் படுகிறார்கள். ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள்? இன்றைக்கு அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அதிமுக தமிழகத்தில் பிரதான கட்சி. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சியாகும். பொன்விழா கண்ட கட்சி. எங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைந்திருக்கிறது. நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று தான் அமித்ஷா தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை" இவ்வாறு எடப்பாடி கூறினார்
இந்நிலையில் அண்ணாமலைக்கு பதில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவரை பா.ஜ.க. வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை தலைவருக்கான நாற்காலியில் அமரவைத்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்தும் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "இந்த விவகாரத்தில் எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஏனெனில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான். அன்றைய சூழலில் உள்துறை அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வர். ஆட்சியில் பங்கு என்பதை அவர்களே பேசிக் கொள்வார்கள்.
அண்ணாமலை அவர்கள் புயலாக இருப்பார், நான் தென்றலாக இருப்பேன். நன்றி என்ற மூன்று வார்த்தை மிகவும் முக்கியமானது. நான் கடைசி வரை நன்றியுடன் இருப்பேன்.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ் கட்சிதான் மிகப்பெரிய ஊழல் கட்சி. அதேபோல் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக மகளிர் அணியினர் போராட்டம் நடத்த உள்ளார்கள் இந்த போராட்டங்கள் தொடர்பான தேதியும், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயம் டெபாசிட் இழக்கும்" இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications