வாரி இறைக்கும் சேற்றிலும் கூட தாமரையை மலர வைப்போம்.. இதுதான் தமிழிசை.. இதுதான் அதிரடி!
மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி தந்துள்ளார்.
சென்னை: "எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம் என்றும் திருமாவளவன், வைகோ ஆகியோரால் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலி வரப்போகிறது என்பதால், அதை முதலில் அவர் பார்க்கட்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் ட்விட்டர் போர் வலுத்து வருகிறது. பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகத்தான்.
ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று போய் கடைசியில் சேறு வரை வந்துவிட்டது (சோறு போடும் விவசாயி செத்து சுண்ணாம்பு ஆவது குறித்து யாரும் கவலைப்படுவது போல தெரியவில்லை).

கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். ஆனால் இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக, திருச்சியிலும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் திமுக சார்பாக நடைபெற்றது. அப்போது மேகதாது விஷயத்தில் ஒன்றுபடாத கட்சிகளான குறிப்பாக பாஜக தலைவர்களை திமுக கூட்டணி கட்சியினர் கடுமையாக சாடி பேசினர்.

செயற்கை மழை
அப்போது துவங்கியதுதான் இந்த பஞ்சாயத்து. கூட்டணி தலைவர்கள் பாஜக தரப்பினரை குற்றஞ்சாட்டி பேசியதற்கு, ட்விட்டரில் தமிழிசை ஒரு பதிவை போட்டார். அதில் ''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" என்று தெரிவித்தார்.

சகோதரியே...
உடனே தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதில் ட்வீட் போட்டார். அதில் "சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என்றார்.

சாத்தியக்கூறு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் சொன்னதாவது: "மேகதாது விவகாரத்தில் முதல் எதிர்ப்பை பதிவு செய்தது பாஜகதான். அணை சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதற்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதே தவிர, காவிரியில் அணையை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. இப்போதுவரை மேகதாது பிரச்சனை இருக்கிறது என்றால் அதற்கு திமுகதான் காரணம். எனவே பாஜகவை நீங்கள் குறைசொல்லக்கூடாது. புல், பூண்டிற்கே இங்கு வழியில்லை என கூறுபவர்களுக்கு பதில் சொல்லிவிட்டோம்.

மலர வைப்போம்
தமிழகத்தில் தாமரை மலருமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பதற்றம் நிலவுகிறது. ஆனால் கண்டிப்பாக தமிழகத்தில் தாமரை மலரும். குளத்திலும் தாமரை மலரும்!!! களத்திலும் தாமரை மலரும்!! தாமரை மலருமா? மலராதா? என்பது குறித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் யாரும் கவலைப்பட தேவையில்லை. எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம்.

வைகோ சண்டை
இப்போ அவங்க கூட்டணியில்தான் ஒரு குழப்பம் நீடிக்கிறது. முதலில் வைகோ துரைமுருகனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார், பின்னர் அன்பழகன் கருத்துக்கு எதிர் கருத்தை சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது திருமாவளவனுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார்.

கூட்டணி குழப்பம்
இவர்களால் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலி வரப்போகிறது. இவர்களது சண்டையும் கூட்டணியும்... ஏதோ வலிமையான கூட்டணி அமைத்ததாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் அவர்கள் கூட்டணியில் உள்ள குழப்பத்தை ஸ்டாலின் முதலில் பார்க்கட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications