"குரங்குகள்" அண்ணாமலை பேசியது தரக்குறைவு இல்லை.. பாஜகவின் கரு.நாகராஜன் அளித்த புதிய விளக்கம்!
சென்னை: பத்திரிகையாளர்களை அண்ணாமலை பேசியது தரக்குறைவு என்று சொல்ல முடியாது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ தமிழக பாஜக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கோபமடைந்து, தரக்குறைவான வார்த்தைகளால் அமைச்சரையும், பத்திரிகையாளர்களையும் திட்டினார்.

தரக்குறைவாக பேசிய அண்ணாமலை
பத்திரிகையாளர்களின் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க என்று செய்தியாளர்களையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

கரு.நாகராஜன் பேட்டி
இந்த நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சங்கத்தின் உரிமை மீட்பு பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கரு.நாகராஜன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அண்ணாமலை பேசியது தரக்குறைவு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அதிகமாக செய்தியாளர்களை சந்திக்கும் தலைவர் அண்ணாமலை.

மழுப்பலான பதில்
தமிழ்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் நடந்துகொண்டதை பார்த்திருக்கிறோம். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எழுந்து அடிக்க சென்றிருக்கிறார். ஆனால் அண்ணாமலை கண்ணியமிக்க தலைவர். ஒரே நாளில் பல்வேறு முறை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவருக்கான நேரம் அவருக்கு கிடைப்பதில்லை என்று விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பலமுறை பத்திரிகையாளர்களை அண்ணாமலை இதுபோல் தரக்குறைவாக பேசியுள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கரு. நாகராஜன் மழுப்பலான பதில்களை அளித்தார். அதேபோல், அண்ணாமலைக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதால் தரக்குறைவாக பேசுவாரா என்ற நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கரு.நாகராஜன் சரியான பதிலை அளிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications