பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் ராகுல்காந்தி..நல்ல கதை..பாஜக கிண்டல்
சென்னை: ராகுல்காந்தி முன்னால் வைக்கப்பட்டிருப்பது வரலாறு கேள்வித்தாள், அதற்கு அவர் புவியியல் பதிலை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலையை சொல்வது போல இருக்கிறது ராகுல்காந்தி பேசுவது என்றும் பாஜக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிரதமர் மோடியைப் பற்றி பேசினார் என்பது ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டாகும். இது குறித்து சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக ராகுல்காந்தி தனது எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்ற ரேஸில் இருந்து கழற்றி விடவே இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ராகுல்காந்தி
தகுதி நீக்க அறிவிப்பிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. லோக்சபாவில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை.

அடுக்கடுக்கான புகார்கள்
அதானிக்கும் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி பேசியதுதான் பிரச்சினைக்குக் காரணம். அதன் எதிரொலியை நான் உணர்கிறேன் என்று சொன்னார். லோக்சபாவில் நான் பேசிய பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. லோக்சபாவில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை. தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது.

திசை திருப்ப நாடகம்
அதானி பிரச்சனையை திசை திருப்ப நாடகம் நடத்தப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். சிறையில் அடைத்தாலும் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தாலும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்றார். நான் உண்மையை பேசுகிறேன் வேறு எந்த வழியையும் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

பாஜக நிர்வாகி கேள்வி
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜக நிர்வாகி சீனிவாசன், ராகுல்காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நீதிமன்றத்திற்கு போகலாமே? என்று கேட்டார். ஆதாரம் இல்லாமல் ஒரு அவதூறு குற்றச்சாட்டு சொல்பவர்களுக்கு நாங்கள் எங்கு ஆதாரம் கொடுப்பது? என்றும் கேள்வி எழுப்பினார்.

தவறான பதில் எழுதுவதா?
ராகுல்காந்தி பேசுவதை கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல உள்ளது. வரலாறு பாடத்தில் கேள்வி கேட்டால் புவியியல் பற்றி பதில் எழுதுகிறார். கெமிஸ்ட்ரி பற்றி கேள்வி கேட்டால் பிசிக்ஸ் பற்றி பதில் எழுதுகிறார் என்றும் கிண்டலடித்தார்.

காயப்படுத்திய ராகுல்காந்தி
தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது ஒரு ஓபிசி சமுதாயத்தை காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்பது ராகுல்காந்தி மீதான வழக்கு. அந்த வழக்கில் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை மோடியா எழுதினார் என்றும் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

ராகுல்காந்தியின் விருப்பம்
தகுதி நீக்க நடவடிக்கை என்பது ராகுல்காந்தியின் விருப்பம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை முன்மொழிந்தவர் அப்போதைய சட்ட அமைச்சர் கபில் சிபில். அந்த சட்டத்தை லோக்சபாவில் எதிர்த்தவர் ராகுல்காந்தி. அந்த சட்ட முன்வரவை கிழித்து போட்டவர் ராகுல்காந்திதான்.

மரியாதை இல்லாத செயல்
மன்மோகன் சிங் வயதும் அனுபவமும் என்ன? இவருடைய வயது என்ன? எவ்வளவு பெரிய அனுபவசாலி அந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்தார். அதை கிழித்து போட்டது ராகுல்காந்திதான். எம்.பியோ, எம்எல்ஏவோ குற்றவாளி என 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது ராகுல்காந்தியின் விருப்பம். அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது என்றும் சீனிவாசன் தெரிவித்தார். இதில் பாஜக எங்கிருந்து வந்தது என்றும் கேள்வி எழுப்பினார் சீனிவாசன். ஒரு சமுதாயத்தை அவமானப்படுத்திய கேள்விக்கு ராகுல்காந்தி பதிலே சொல்லவில்லையே என்றும் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications