மீண்டும் மோடி தான்.. 400யை தொடுமா பாஜக? ‛இந்தியா’ கூட்டணிக்கு எத்தனை இடம்? News X கருத்து கணிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மோடி தான் பிரதமராக பொறுப்பேற்பார் என நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த அமைக்கப்பட்டுள்ள ‛இந்தியா' கூட்டணி மிக குறைந்த இடங்களில் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி நடக்கும் முதற்கட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் தான் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனமும், டி டைனாமிக்ஸ் அமைப்பும் சேர்ந்து லோக்சபா தேர்தலுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தி முடித்துள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி மீண்டும் மத்தியில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் கடந்த 2014, 2019 தேர்தல்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 383 தொகுதிகளில் வெல்லும் என நியூஸ் எக்ஸ் - டி டைனாமிக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் 325 இடங்களில் ஜெயிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஹாட்ரிக் முறையில் 3வதாக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜகவை வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் கூட்டணி வெறும் 109 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த கருத்து கணிப்பின் முடிவு உள்ளது. இதுதவிர பாஜக மற்றும் ‛இந்தியா' கூட்டணியில் இணையாத கட்சிகள் 51 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications