நான் மட்டுமே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவேன்.. அண்ணாமலை அறிவிப்பு!
சென்னை: நான் மட்டுமே நாளை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன், மற்ற பாஜகவினர் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நின்று திமுக அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை மட்டும் பதிவு செய்வார்கள் என பாஜக மாநிலத் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாணவர் ஒருவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்ததோடு, “நாளை 10 மணியளவில் நான் என்னை 6 முறை சாட்டை அடித்துக்கொள்ள கூடிய நிகழ்வை என்னுடைய வீட்டிற்கு வெளியே நிகழ்த்தப் போகிறேன். நாளையில் இருந்து திமுக என்கிற கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன்.” என அறிவித்தார்.
அண்ணாமலை அறிவித்துள்ள இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள போராட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
“நாளை, 27.12.2024: சாட்டையால் அடித்துக் கொள்ளும் கவன ஈர்ப்புப் போராட்டம்.
தமிழக மக்கள் மிகவும் பண்பானவர்கள். அமைதியானவர்கள். பொறுமை மிக்கவர்கள். கடந்த நான்கு ஆண்டுக்கால திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண் காவலர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
பெரும்பாலான குற்றங்களில், திமுகவினருக்குத் தொடர்பு இருப்பதால், ஊடகங்களின் துணை கொண்டு, திமுக அரசால் அவை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தாங்கள் படும் இன்னல்களுக்குத் தீர்வு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு அமைச்சர்கள் வரையிலான தொடர்புகளும், நெருக்கமும் இருப்பதால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தங்கள் பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்காமல், குற்றவாளிகள் தங்கள் கண்முன்னே சுதந்திரமாகச் சுற்றி வருவதைப் பார்த்து, தமிழக மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும், தமிழக பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற பிறகே, திமுக குற்றவாளிகளைக் கைது செய்கிறது காவல்துறை. பல நேரங்களில், பொதுமக்கள் தங்கள் பாதிப்புகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல், ஆளுங்கட்சியினரால் காவல் நிலையங்களில் வைத்தே மிரட்டி அனுப்பப்படுவதும் நடைபெறுகிறது. இந்தக் குற்றங்கள் வெளியே தெரிவதும் இல்லை.
திமுகவினர் என்பதால், நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே அவதூறு பரப்பும் வகையிலும், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலில் தமிழகம் இருக்கிறது. இனியும் இதனை அனுமதித்தால், நம் சகோதர, சகோதரிகள், குழந்தைகள் எதிர்காலத்தில் இருள் சூழ்ந்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக மக்களை இன்னலுக்குள்ளாக்கி இருக்கும் திமுக அரசைக் கண்டித்து ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, திமுக அரசு அனுமதிப்பதில்லை. எங்களைக் கைது செய்து, பொதுமக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று செயல்படுகிறது.
எனவே, திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.
தமிழகம் முழுவதும் உள்ள பாஜக சகோதர சகோதரிகள், அவரவர் இல்லத்திற்கு முன்பு நின்று, திமுக அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை மட்டும் பதிவு செய்வார்கள். சட்டம் ஒழுங்கு மீட்கப்பட்டு, மீண்டும் அனைவருக்கும் பாதுகாப்பான மாநிலமாக, குறிப்பாக நமது சகோதரிகள் அச்சமின்றி வாழும் மாநிலமாகத் தமிழகம் மாறும் வரை, தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications