நாங்க கறுப்புக்கொடி ஏந்துவது எதற்கு தெரியுமா? கனிமொழிக்கு பதில் கொடுத்த பாஜக தலைவர் தமிழிசை!
சென்னை: "நாங்கள் இன்று கருப்பு கொடி ஏந்தி நிற்பது தமிழகத்தின் நலனைக் காப்பதற்காகவே" என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வீடு முன்பாக கருப்பு கோடி போராட்டத்தில் ஈடுபட்டார். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், டி.கே.சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படுகிறது.

அந்தவகையில், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வீடு முன்பாக கருப்பு கோடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தேவையற்றது. தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்த பின்பும் நம்ப மறுப்பது ஏன்? அவரவர் ஆட்சியின் அவல நிலையை மறைக்கவே கூட்டம்.
மறுசீரமைப்பு கூட்டம் இல்லை, ஊழலை மறைக்கும் கூட்டம். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர்கள் அவரவர் தோல்வியை மறைக்கத்தான் இதில் கலந்து கொள்கிறார்கள். கனிமொழி சொல்கிறார், நாங்கள் கறுப்புக்கொடி ஏந்துவது மக்களுக்கு விரோதமாகவாம். நாங்கள் இன்று கருப்பு கொடி ஏந்தி நிற்பது தமிழகத்தின் நலனைக் காப்பதற்காகவே.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலியில் மட்டும் 44 கொலைகள் நடந்துள்ளன. ஓய்வுபெற்ற காவல் அதிகாரி தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று வீடியோ போட்ட அடுத்த நாள் கொலை செய்யப்படுகிறார். என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?" எனத் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளதால் அரசியல் ரீதியாக இது கவனம் பெற்று வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே ஏற்பட்ட கோபம் மற்றும் எதிர்ப்பை மடைமாற்ற, மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணைக்கு சேர்த்து, நாளை ஒரு மெகா நாடகத்தை அரங்கேற்றப் போவதாக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அவர் ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
கர்நாடக அரசுடன் காவிரி பிரச்சனை இருக்கிறது, கேரள அரசுடன் முல்லைப் பெரியாறு, பேபி அணை, இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கனிமவளங்கள் கடத்தல் என பல பிரச்சினைகள் உள்ளன. அது குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களை திசை திருப்ப திமுக அரசு முயற்சிக்கிறது. கூட்டணி கட்சிகளுக்காக தமிழக மக்களுக்கு விரோதமாக ஸ்டாலின் அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்தார் அண்ணாமலை.
அதன்படி, பாஜகவினர் அவரவர் வீடுகளின் முன்பாக நின்று தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சனை செய்யும் கர்நாடக மற்றும் கேரள மாநில தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்குவதை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications