மாலை போட்டது என்னவோ விஜய்.. இதுல ரஜினிகாந்த் என்னப்பா பண்ணுனாரு? சீனுக்கு வந்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர், விஜய், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் இருந்து இவர் மாறுபட்டவராகவே காட்டி வருவதாக பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதின் ரஜினிகாந்த்தை, செந்தில் கதாப்பாத்திரம் போல உருவகப்படுத்தியுள்ளார். விஜய் செயல்பாட்டை பார்த்து ரஜினி கோபப்படுவதாக அவர் சித்தரித்துள்ளார். "நாம எந்த ரூட்ல போனாலும் ஆப்போசிட் ரூட்லயே வந்து மோதறானே? தெரியாம செய்றானா? வேணும்னே செய்றானா?" என்று ரஜினிகாந்த் யோசிப்பார் என்பதை போல ப்ளூ சட்டை மாறன் கற்பனை செய்துள்ளார்.

விஜய் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், திராவிட இயக்கத்தின் மீது தனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருப்பதாகவும் தனது செயல்பாடுகளால் தெரிவித்து வருகிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் பெரியாருக்கு மாலை அணிவித்ததால், பாஜக தலைவர்களும் கோபமடைந்துள்ளனர். தமிழிசை சவுந்தரராஜனும் விஜயை விமர்சித்துள்ளார். இதனால், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இடதுசாரிகளிடையே அவர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
மறுபுறம், ரஜினிகாந்த் வலதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவராகக் கருதப்படுகிறார். அவர் அரசியலில் நுழைவதாக அறிவித்த போது, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறான கொள்கைகளைப் பேசினார். இதனால், திராவிட இயக்கத்தினரிடையே அவர் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.
இதனிடையே விஜய், பெரியார் நினைவிடம் சென்றது குறித்து விஜய் ரசிகர் ராம்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு- பெரியார் பிறந்தநாளுக்கு அவரை மதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை இட்டு, வணங்குவது வழக்கம்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம், பெரியாரின் சம உரிமை, சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளைப் பெயரளவில் மட்டும் இல்லாமல் மனதளவில், சமரசமின்றிப் பெரிதும் மதித்துப் போற்றும் ஓர் அரசியல் இயக்கம். அதேபோல அவரது பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற பெண்கள் சார்ந்த முன்னெடுப்பைக் கொள்கையாகவேப் பின்பற்றுவதில் மற்றும் அதன் செயலாக்கத்தில் மிக உறுதியாக நிற்கப்போகும் இயக்கம்.

இப்படியெல்லாம் பெரியாரை மனதில் தாங்கி மதித்துப் போற்றுகிற தமிழக வெற்றிக் கழகம், அவரது பிறந்தநாளுக்கு வணக்கம் செலுத்த அர்த்தம் மிகுந்த ஓர் இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்தது. பெரியார் உலவிய, பெரியாரின் காலடித் தடங்கள் பதிந்த இடத்தில் அவருக்குப் பிறந்தநாள் வணக்கம் செலுத்துவதுதான் ஓர் கொள்கைவழி வணக்கமாகவும் அர்த்தப்படும் என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்த இடம்தான் பெரியார் திடல்.
1965ல் இருந்து விடுதலை நாளிதழின் அலுவலகமாகவும் செயல்படும் அந்த இடம், பெரியார் இறக்கும் வரை அவர் உலவிய இடங்களில் ஒன்று. அவர் சுவாசம் கலந்த காற்று இருந்த இடம். இன்றைக்கும் அவரது சுவடுகள் அழியாமல் பாதுகாக்கப்படும் ஓர் இடம். அதனால்தான், அந்த இடத்தில் இருக்கும் பிரமாண்டமான பெரியார் சிலைக்கு, அதன் பீடத்தில் மலர்தூவி வணக்கம் செலுத்த முடிவெடுத்தே அங்கு சென்றோம்.
சிங்கத்திற்கு, அது வாழ்ந்த குகையிலேயே சென்று வணக்கம் செலுத்துதல் என்பது சிங்கத்தின் ஆசியை நேரடியாகப் பெறுவது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். அது, அரசியல் களத்தில் கொள்கை ரீதியாக உறுதியாகக் களமாட ஓர் உத்வேகத்தை தரும். மேலும்,இந்த முடிவு, உணர்வுப்பூர்வமாக மனதின் ஆழத்தில் இருந்து எடுத்த ஓர் அழுத்தமான, அர்த்தம் பொதிந்த, உறுதிமிக்க அரசியல் முடிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சம்பவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்துக்களை பகிரவும்.












Click it and Unblock the Notifications