திடீர் பரபரப்பு..முதல்வரின் மருமகன் சபரீசன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. விரைந்த நீலாங்கரை போலீஸ்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கண்ட்ரோல் ரூமுக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நீலாங்கரை போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

வெள்ள பாதிப்புகளையும், மீட்புப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து களத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ட்ரோல் ரூமுக்கு எண் 100க்கு இன்று மதியம் 3-20 மணியளவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் ஒருவர் முதல்வரின் மருமகன் சபரீசன் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறிவிட்டு இணைப்பு துண்டித்துவிட்டார்.
இதையடுத்து உடனடியாக நீலாங்கரை போலீஸார் சபரீசன் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வந்து, அவரது வீட்டில் சோதனை செய்தனர். இருப்பினும், அவரது வீட்டில் குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த நபரின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்தபோது அது வேளச்சேரி என டவரை காட்டியுள்ளது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து சென்று மிரட்டல் விடுத்த நபரை, அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications