ஐபிஎல் கிரிக்கெட் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்.. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்றும் பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத முகாம்களை மட்டுமே துல்லியமாக குறிவைத்து இந்திய ராணுவம் தகர்த்தது.

எல்லையில் பதற்றம்
இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையில் வாலாட்ட ஆரம்பித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாகிஸ்தானின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன் தினம் இரவு மற்றும் நேற்று இரவு பல்வேறு ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது.
இதேபோன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களை குறிவைத்து டிரோன்கள் தாக்குதல், வான் வழி தாக்குதல் நடத்த முயற்சித்தது. எனினும் பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா முறியடித்துவிட்டது. தொடர்ந்து எப்படியாவது இந்தியாவுக்கு குடைச்சல் குடுக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு பாகிஸ்தான் திரிந்து வருகிறது. தொடர்ந்து இருபுறமும் தாக்குதல் மற்றும் பதிலடி என போர் பதற்றம் உருவாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதனால் நேற்று இரவு முதலே இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லை மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. போரின் போது ஒலிக்கப்படும் சைரன் ஒலி ஒலிக்கப்பட்டது. பஞ்சாப்பில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது, 27 விமான நிலையங்கள் மூடல் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு படையினர் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு
மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வருவதால் ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப்கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையேயான போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்து ரசிகர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. நடப்பு ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications