‛‛வெடிகுண்டு மிரட்டல்’’.. சென்னையில் 13 பள்ளிகளை அலறவிட்ட மெயில்.. என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்
சென்னை: சென்னையில் பல்வேறு பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
சென்னையின் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்திருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட் பள்ளிகள் மதியத்திற்கு பிறகு விடுப்பை அறிவித்தன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோஷியல் மீடியாக்களில் வேகமாக தகவல்கள் பரவியதால், தங்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்க பெற்றோர்கள் பள்ளிகள் முன்பு குவிந்தனர். எனவே சென்னையில் பதற்றம் ஏற்பட்டது.

மறுபுறம் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் சோதனையை மேற்கொண்டனர். தற்போது வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டோ அல்லது சந்தேகப்படும் வகையில் ஏதேனும் வெடி பொருட்களோ மீட்கப்படவில்லை. எனவே இது புரளி என காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார். மேலும், "வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிரமாக தேடி வருகிறோம். காலை 11 மணியிலிருந்து பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மெயில் வந்திருக்கிறது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட 13 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான பள்ளிகளில் நாங்கள் சோதனை செய்து பார்த்துவிட்டோம். வெடிகுண்டு எதுவுதும் கைப்பற்றப்படவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநில தலைநகரிலும் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி இதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எப்போதும் போல நகரின் மற்ற அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளை போலவே, பெங்களூரின் யெலஹங்கா மற்றும் பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் பள்ளிகள் டிச.1ம் தேதி காலை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே மாணவர்கள் சரசரவென வரத்தொடங்கினர். பள்ளியின் அலுவலர்கள் கம்ப்யூட்டர்களை ஆன் செய்து மெயில்களை செக் செய்ய தொடங்கினர். அதற்குள் வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால் அதன் பின்னர்தான் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதே தெரிய வந்தது.
உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் மாணவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் பள்ளிகளின் வாசலில் பெற்றோர்கள் குவிந்தனர். தொடக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. ஆனால் நேரம் போக போக 68 பள்ளிகளுக்கு மிரட்டல் மெயில் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications