ரீல்ஸ்க்காக இப்படியா செய்யனும்.. சென்னை ரயிலில் நொடியில் நடந்த ஷாக் சம்பவம்.. துடிதுடித்த இளைஞர்
சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடியே விபரீத சாகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின்கம்பம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வாலிபர் மின்சார ரயிலில் சாகசம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு பிரபலம் அடைவதற்காக இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனம் ஓட்டி செல்வது போன்ற விபரீத செயலில் ஈடுபடுகிறார்கள். சில கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி செல்வதும், ரயில்களில் வாசற்படியில் தொங்கியபடியும் சாகசத்தில் ஈடுபட்டு ஆபத்தான வகையில் பயணம் செய்கிறார்கள்.

இதனால் அவர்களது உயிர்களுக்கு மட்டும் இன்றி, மற்றவர்களின் உயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. காவல்துறையினரும் இது போன்ற விபரீத சாகசத்தில் ஈடுபடுவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். எனினும் சிலர் இதனை மீறி இது போன்ற விபரீத சாகசத்தில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அங்கேறுகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் விபரீத சாகசம் செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். அபிலாஷ் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வருகிறார். கல்லூரிக்கு நண்பர்களுடன் மின்சார ரயிலில் பயணிப்பது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் மின்சார ரயிலில் அபிலாஷ் நண்பர்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது அபிலாஷ் மின்சார ரயிலில் வாசற்படியில் நின்று கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் மின்கம்பம் மீது மோதியதில் அபிலாஷ் தூக்கி வீசப்பட்டு ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் சாகசத்தில் ஈடுபட்டு மின்கம்பம் மோதி ரயிலில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், அபிலாஷ் வாசற்படி அருகே நின்று கொண்டு கம்பியை பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடுகின்றார். அப்போது இதனை மற்றொரு வாலிபர் வீடியோ எடுக்கின்றார். வீடியோ எடுப்பவரை பார்த்து மச்சான் இங்க பாரு.. என்று சொல்லிக்கொண்டு அபிலாஷ் டான்ஸ் ஆடுகிறார். அப்போது அவர் ரயில் செல்லும் திசையை பார்க்காமல் பின்புறம் பார்த்ததால், மின்கம்பம் வருவதை கவனிக்காமல் இருந்தார்.
இதில் மின்கம்பம் அவர் மீது பலமாக மோதியது. தலையில் அடிபட்ட நிலையில், அபிலாஷ் தூக்கி வீசப்பட்டு ரயிலில் இருந்து கீழே விழுந்தார். கண் இமைக்கும் நொடியில் இந்த சம்பவம் அரங்கேறி விட்டது. அப்போது மற்ற வாலிபர்கள் அவர் இறந்துவிட்டான்டா என்று பதற்றத்துடன் கூறுவது போன்ற வீடியோ பதிவாயுள்ளது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ காட்சி பரவி பார்ப்பவர்களை பதை பதைக்க செய்துள்ளது. இன்ஸ்டாவில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த போது இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
படியில் பயணம் நொடியில் மரணம் என பல இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாமல் சில இளைஞர்கள் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடுவதாகவும், இளைஞர்கள் எப்போதும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
