அரசு மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்.. கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது
சென்னை: கருக்கலைப்பு வழக்கு தொடர்பாக அரசு மருத்துவரிடம் ரூ. 12 லஞ்சம் கேட்ட புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு நபர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் அடைய செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 17 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கியதாக ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல் தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் சென்று அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக காவல்துறையினரிடம் அந்த சிறுமியின் தாய் கூறியிருந்தார். இதற்கிடையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த ரஞ்சித் மீது போக்சோ வழக்கினை பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கருக்கலைப்பு செய்யதாக கூறப்படும் அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யதாக 2 லட்சம் பணமும் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதாவது 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து இன்ஸபெக்டர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். தொடர்ந்து அரசு மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே பொன்னேரி அருகே பதுங்கியிருந்த காவல் ஆய்வாளர் மகிதாவை போலீசார் கைது செய்தனர். மகிதா மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications