மக்களுக்கு பயனுள்ள ”நல்ல யுக்திகள்”.. எங்கிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வரனும் - முதலமைச்சர் அட்வைஸ்
சென்னை: மக்களுக்கு பயனுள்ள புதிய யுக்திகள் எங்கு இருந்தாலும் அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு துறை செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட திட்டங்கள், அரசு அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களாக அரசு துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று தொடங்கிய இந்த கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தொழிற்துறை, மின்சாரம் ஆகிய துறைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், முக்கிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் வினவினார்.
அதிகாரிகளும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், கிடப்பில் உள்ளவை, அறிவிப்புகளை செயல்படுத்தவதில் ஏற்பட்ட தாமதம், நடைமுறை சிக்கல்கள் போன்றவற்றை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அவர்கள் தெரிவித்ததை கேட்ட முதலமைச்சரும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான யோசனைகளையும், எதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்கினார்.
குறிப்பாக, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தனது கனவு திட்டமான நான் முதல்வன்' திட்டத்தை விரிவுபடுத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மக்களுக்கு பயன் தரும் வகையிலான புதிய யுக்திகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய தொழில்களை தொடங்குவதில் இருக்கும் சிக்கல்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications