இளைஞர்களுக்கு முக்கியத்துவம்.. மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கான பட்ஜெட் இது.. அண்ணாமலை கருத்து!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் மக்களின் நலன், வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்திய பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக இளைஞர்களுக்கான இன்டெர்ன்ஷிப் ஊக்கத்தொகை திட்டத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா தேர்தல் காரணமாக பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்திருந்த நிலையில், பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்த பின் தாக்கலான முதல் பட்ஜெட் இதுவாகும். இதனால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அந்த வகையில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடியும், கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடியும், சுகாதாரத்திற்கு ரூ.89,287 கோடியும், எரிசக்தி துறைக்கு ரூ.68,769 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.65 லட்சம் கோடியும், வணிகம் மற்றும் தொழில் துறைக்கு ரூ.47,559 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்களின் நலன், வளர்ச்சி ஆகியவற்றை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. அதேபோல் மக்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கு நன்றி. இந்த பட்ஜெட்டில் 14 நகரங்களில் போக்குவரத்து திட்டங்கள், ரூ.11 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
12 தொழிற்பூங்காக்கள், இளைஞர்களுக்கான இன்டெர்ன்ஷிப் திட்டத்திற்கான ஊக்கத்தொகை, முத்ரா திட்டத்திற்கான லோன் தொகை அதிகரிப்பு, மகளிர் முன்னேற்றத்திற்காக ரூ.3 லட்சம் கோடியிலான திட்டங்கள் உள்ளிட்டவை என்டிஏ கூட்டணியின் ஆட்சியின் உறுதிமொழியை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொலைநோக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications