இத்தனை லட்சம் கோடியா? நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு வாங்கும் கடன் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோ
சென்னை: மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கி வருகின்றன. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு வாங்கப்போகும் கடன் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே கடன் வாங்கி வருகின்றனர். ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இந்த கடன் பெறப்பட்டு வருகிறது. அதன்பிறகு கடன் பெற்றவர்களுக்கு வட்டி மற்றும் அசல் தொகையை அந்தந்த அரசுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தான் இன்று மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது என அவர் அறிவித்தார். மேலும்
பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் புதிய வருமான வரி செலுத்தும் முறையில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிய வருமான வரி செலுத்தும் புதிய நடைமுறையில் நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ரூ.3 லட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம், ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதம், ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்படும். தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கு ஒரே வரி முறை அறிமுகம் செய்யப்படும். இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14.01 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை பார்க்க பெரிதாக தெரிந்தாலும் கூட முந்தைய ஆண்டு பட்ஜெட்டுகளை ஒப்பிடும்போது குறைவானதாகும்.
ஏனென்றால் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தை ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடப்பு நிதி ஆண்டில் ரூ.14.01 லட்சம் கோடி கடன் தொகை வாங்குவதன் நோக்கம் என்பது இடைக்கால பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதம் என்ற அளவில் இருந்த நிதிப்பற்றாக்குறையை 4.9 சதவீதம் என்று குறைக்க திட்டமிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications