அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி!
சென்னை: தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிய கட்சி, தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

ஆட்சியின் முதல் மாதத்திலேயே எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
இருப்பினும், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை மற்றும் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் குறைந்த புதிய முகங்கள் என்பதால், அவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், கட்சி மற்றும் அரசின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நாளை மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த்
முதல்வர் விஜய் தற்போது டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தை முன்னெடுக்கிறார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூட்டம்
கடந்த ஒரு மாத காலத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடமிருந்து கிடைத்துள்ள கருத்துகள், எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனையூர் வட்டாரங்கள்
மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக பொதுமக்களுடன் தொடர்பை வலுப்படுத்துவது, தொகுதிகளில் நேரடி ஆய்வுகளை அதிகரிப்பது மற்றும் மக்கள் குறைகளை விரைவாக தீர்ப்பது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படலாம் என்று பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக எம்எல்ஏக்கள்
இதற்கு முன்பும் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தவெக எம்எல்ஏக்களுடன் அவர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தற்போது நடைபெற உள்ள இந்தக் கூட்டம், ஆட்சியின் முதல் மாத செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் முக்கிய அமர்வாக பார்க்கப்படுகிறது.
தவெக அரசு
தமிழக வெற்றிக் கழக அரசு மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ள நிலையில், அந்த நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால செயல்பாட்டு வரைமுறைகள் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications