Exclusive ஜெயலலிதாவை காக்க போயஸ் கார்டனில் காவலுக்கு இருந்தவர் மதுசூதனன்.. சிஆர் சரஸ்வதி நெகிழ்ச்சி
சென்னை: எம்ஜிஆர் இறந்தவுடன் ஜெயலலிதாவுக்கு சிலரால் அச்சுறுத்தல் இருந்தது. அப்போது மதுசூதனன்தான் போயஸ் தோட்டத்தில் ஒரு வாரமாக காவலுக்கு இருந்தார் என அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
மூச்சுத்திணறலால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சசிகலா நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அமமுக செய்தித் தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் மதுசூதனன் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வருகிறார். அதன் பின்னர் எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணியாக பிரிந்தது.
அந்த நேரத்தில் ஜெயலலிதா அணியில் இருந்தார் மதுசூதனன். எம்ஜிஆர் மறைந்தவுடன் ஜெயலலிதாவுக்கு வேறு சிலரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு மேல் போயஸ் கார்டனில் இருந்து எந்த அசம்பாவிதமும் நேராமல் பார்த்துக் கொண்டவர் மதுசூதனன்.

சசிகலா
ஜெயலலிதா இறந்த 9ஆவது நாள் சசிகலாவின் கையை பிடித்துக் கொண்டு நீங்கள்தான் பொதுச் செயலாளராக வர வேண்டும்" என சொன்னவர் மதுசூதனன். எனக்கு யாரும் எதிரிகள் இல்லை என்றும் என்னை அவர்கள் பேசுவதால் நான் வருந்தவில்லை. என்னை பொருத்தமட்டில் இது ஒரு குடும்ப சண்டை. அண்ணன் தம்பிகள் சண்டை எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என சசிகலா தெளிவாக சொல்லிவிட்டார்.

ஜெயலலிதா
அப்படியிருக்கும் போது கட்சிக்கு முக்கிய பங்களித்த, ஜெயலலிதாவை அச்சுறுத்தலில் இருந்து காத்த மதுசூதனனை பார்ப்பது என்பது சசிகலாவின் கடமை. அதைத்தான் அவர் செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளித்ததால் மதுசூதனன் அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், பதிலுக்கு மதுசூதனன் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

உடல்நலம் பாதிப்பு
அதெல்லாம் வேறு. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை சந்திப்பது மனிதாபிமானம். ஜெ அணி , ஜா அணி பிரிந்த போது ஜானகி அணியில் இருந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர்களாக இருந்தார்களே. இதெல்லாம் அரசியலில் சாதாரண விஷயம். இது குடும்பச் சண்டைதான்.

ஆரம்பம்
மதுசூதனன் ஆரம்பத்திலிருந்து எந்த கட்சிக்கும் மாறாமல் அதிமுகவிலேயே இருந்தவர். இது அவருடைய வரலாறு. அதிமுகவுக்கு அர்ப்பணித்தவர்களில் அவரும் ஒருவர். கொரோனா முடிந்தவுடன் சசிகலா, ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார். சசிகலாவை பொருத்தவரை அதிமுக சிதைந்து போகக் கூடாது.

எடப்பாடி உண்மை சொல்லணும்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா தனியார் தொலைகாட்சியில் அளித்த பேட்டியில் உண்மையை சொல்ல வேண்டும் என்கிறார். ஆனால் அவர் எப்படி முதல்வரானார் என்ற உண்மையை முதலில் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் சசிகலா சொன்னது அனைத்தும் உண்மை. ஒவ்வொரு விஷயத்தையும் சசிகலா பேட்டியில் சொன்ன போது ஆதாரத்துடன்தானே சொன்னார். எனவே அனைத்தும் உண்மை.

அதிமுக
சசிகலா இருந்த போதும் 2006ஆம் ஆண்டு அதிமுக தோற்றதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஆண்டு அதிமுக தோற்கடிக்கப்பட்டது மக்களால். ஆனால் இன்று அதிமுக 2021 இல் தோற்கடிக்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறை, சில அறிவிப்புகள், குழப்பங்களால்தானே ஒழிய மக்களால் அல்ல. இவர் உண்மையை புரிந்து கொண்டால் கட்சியில் குழப்பமே இருக்காது என்றார் சரஸ்வதி.












Click it and Unblock the Notifications