உதயநிதி இளம் பெரியாரா? பெரியாரை அவமானப்படுத்திட்டீங்களே! கொந்தளித்த நாஞ்சில் சம்பத்
சென்னை: உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என கூறி பெரியாரையே திமுக அவமானப்படுத்திவிட்டதாக தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ரூ 1000 பணத்திற்காக வந்தவர்கள். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளனர்.

உதயநிதியை இளம் பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம் பெரியாரை அவர்கள் அவமானப்படுத்திவிட்டனர். அதிமுகவில் இருக்கும் பாதி பேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தொடர்ந்து 4ஆவது தலைமுறையாக திராவிட மாடல் நாயகர், முதல்வர் ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
திராவிட இயக்கத்தை அடுத்த 50 ஆண்டு காலம் நகர்த்திச் செல்ல இருக்கிறவர் நம் 5ஆவது தலைமுறையான உதயநிதி ஸ்டாலின். எல்லாரும் பிறந்தநாளுக்கு வெள்ளை நிற ஆடை, புத்தாடை, கலர் ஆடைகளை அணிவார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளன்று கருப்பு உடை அணிந்திருந்தார். நாங்க எல்லாரும் பூரித்து போனோம். அப்படிப்பட்ட 'இளம் பெரியார்' உதயநிதியை தந்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். உதயநிதியை இளம் பெரியார் என குறிப்பிட்டதற்குத்தான் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத், திமுகவில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி வைகோ மதிமுக தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அங்கும் அவருடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா காரையும் கொடுத்தார்.
பின்னர் ஜெயலலிதா மறைந்ததும் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார். அவர் அமமுக தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை என கூறிய சம்பத், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
எனினும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். திமுக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். இந்த நிலையில் திமுகவினர், தன்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதாக கூறி தவெகவில் இணைந்தார்.
மேலும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் விமர்சித்தனர். அதிமுகவில் இன்னோவா காரை வாங்கிவிட்டு, திமுகவில் லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு தற்போது கட்சி மாறிவிட்டார் என விமர்சித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications