நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு..அதிமுக ஒன்றிணைப்பு பேச்சு தீவிரம்?
சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதிமுகவில் சில சீனியரும் அணிகள் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி கட்சி ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அந்தக் கூட்டணி பரிதாப தோல்வியை சந்தித்தது. அதிமுகவும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் உள்ளது.

இதனால் தேர்தலுக்கு முன் அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது. ஆனால் சசிகலாவை சேர்க்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் சில சீனியர்கள் சொன்னது உண்மைதான் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுக சீனியர்கள்.
அதிமுக ஒரு எக்கு கோட்டை என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது.
இதனால் அதிமுக ஒன்றியணைய வேண்டும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டு கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பிப்பது, கூட்டணி கட்சிகளை அழைப்பது, அணிகள் இணைப்பு, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவைத் தவிர மற்ற அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications